பில்லா’ வெளியாகி 12 ஆண்டுகள் ஆனதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் இயக்குநர் விஷ்ணுவர்தன்.

2007-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி வெளியான படம் ‘பில்லா’. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அஜித், நயன்தாரா, நமீதா, பிரபு, ரகுமான், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். எல்.சுரேஷ் தயாரித்த இந்தப் படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.மேலும், படத்தின் ஒளிப்பதிவு, பின்னணி இசை என அஜித்தை மிகவும் ஸ்டைலாக காட்டிய படம் ‘பில்லா’. இப்போதும் அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மிகவும் பிரபலம்.

இன்று (டிசம்பர் 14) இந்தப் படம் வெளியாகி 12 ஆண்டுகளாகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இது தொடர்பாக விஷ்ணுவர்தன் தனது ட்விட்டர் பதிவில், “வாவ்! ‘பில்லா’ வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகிறது. என்னவொரு பயணம். நேற்றுதான் ரிலீஸ் ஆனது போல் இருக்கிறது,

ஆனால் இன்னமும் என் இதயத்தில் புதிதாக இருக்கிறது. அஜித்துடன் இணைந்த முதல் படம். நன்றி அஜித் சார். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் அன்பான ரசிகர்களுக்கு எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவின் நன்றிகள். லவ் யு ஆல், விரைவில் சந்திப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது இந்திப் படமொன்றை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். அதனைத் தொடர்ந்து தமிழில் விஷ்ணுவர்தன் படம் இயக்குவார் எனத் தெரிகிறது.