சென்னை: ஹெச்.வினோத் இயக்கும் வலிமை படத்தில் அஜித்குமார் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம், நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்திருந்த வேடத்தில் அஜித் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது.

இதைத் தொடர்ந்து வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடிக்கிறார் அஜித்.

நேர்கொண்ட பார்வையை இயக்கிய வினோத், இதையும் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இதை தயாரிப்பாளர் போனிகபூர் உறுதிப்படுத்தினார். இதன் ஷூட்டிங், வரும் 13 ஆம் தேதி ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்குகிறது.

இந்நிலையில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வந்தனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார். இதே போல அங்குள்ள முன்னணி நடிகை ஒருவர் அஜித் நடிகையாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அஜித் ஜோடியாக யாமி கவுதம் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் கவுரவம், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படங்களில் நடித்தவர்.