தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். அதிரடி கதைகளில் நடிக்க விருப்பம் இல்லாமல் தனது ரூட்டை பழைய பார்முலாவுக்கு மாற்றியிருக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்க வந்தபோது நகைசுவை கதைகளையே தேர்வு செய்தார்.

முதல் படமான மெரினாவில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து தனுஷின் 3 படத்தில் நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை நடிப்பு பாராட்டப்பட்டது. இந்த படங்கள் வசூலை வாரி குவித்தது.

ரஜினி முருகன் படத்தில் நகைச்சுவையில் கலக்கி இருந்தார் என்று சொல்லலாம். அதன்பிறகு வேலைக்காரன் சீமராஜா மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களுக்கு மாறி வில்லன்களுடன் சண்டை போட ஆரம்பித்தார். இந்த படங்கள் படுதோல்வி அதிலும் குறிப்பாக சீமராஜா மற்றும் மிஸ்டர் லோக்கல் நஷ்டத்தை சந்தித்தது.

ரசிகர்கள் குறிப்பாக சிவகார்த்திகேயன் நகைச்சுவைப் படங்களில் நடிப்பதையே விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த நகைச்சுவைப் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படம் என்று கூறப்படுகிறது.

இதேபோல் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் டாக்டர் படமும் நகைச்சுவை படம் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் தேடிவரும் அறிமுக இயக்குனர்களிடமும் நகைச்சுவைக் கதைகளை கேட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.