படிக்கும்போது எப்படியாவது சென்னைக்கு போய் நடிகராக வேண்டும் என்பது என்னுடைய லட்சியமாக இருந்தது. ஒரு நல்ல நாள் பார்த்து சென்னைக்கு கிளம்பி வந்தேன். சென்னையில் எனக்கு சொந்த பந்தம் யாரும் இல்லாததால் தங்குமிடம், உணவு என பல தேவைகள் இருந்தது. சென்னைக்கு வந்த புதியதில் ஓட்டல் வேலை, பர்னீச்சர் கம்பெனி வேலை, சேல்ஸ்மேன் என்று செய்யாத வேலையே கிடையாது.

ஒரு கட்டத்தில் நான் வந்த நோக்கமே மறந்துபோகுமளவுக்கு வேலைப்பளு என்னை அழுத்தியது. சொந்தமாக பிசினஸ் பண்ணினால் நமக்கு நேரமும் கிடைக்கும், சினிமா வாய்ப்பும் தேடலாம் என்று தோன்றியது. அதன்படி கிண்டி தொழிற்பேட்டையில் லாட்டரி வியாபாரம் ஆரம்பித்தேன். கொஞ்சம் வருமானம் கிடைத்தது. ஆனால் கிண்டி ஏரியா என்னை சினிமாவிலிருந்து அந்நியப்படுத்துவது மாதிரி தெரிந்தது.

லாட்டரி விற்பனையில் கிடைத்த லாபத்தை மூலதனமாக வைத்து வடபழனியில் பீடாக்கடை ஆரம்பித்தேன். வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்ததும் வேலைக்கு ஒரு ஆளை அமர்த்திவிட்டு டான்ஸ், சண்டை என்று சினிமாவுக்காக என்னை பட்டை தீட்டி கொள்ள ஆரம்பித்தேன். அப்போது என் சொந்த உழைப்பில் வாங்கிய டூ விலரில் சினிமா வாய்ப்பு கேட்க போவேன்.

சென்னை வந்ததும் துணி பிசினஸை டெவலப் செய்யும் விதமாக கூடுதலாக ஆட்களை நியமித்தேன். பிசினஸ் நன்றாக பிக்கப் ஆனது. அப்போது சினிமா தொடர்புகள் கிடைத்தது. அப்படித்தான் என்னுடைய முதல் படமான சின்னத்தாயி இயக்குநர் கணேஷ்ராஜாவின் பழக்கம் கிடைத்தது. அதே சமயத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா சாரின் அறிமுகமும் கிடைத்தது. என்னை வண்ண வண்ணப் பூக்கள் படத்துக்காக செலக்ட் பண்ணினார். இப்போது பிரபலமாக இருக்கும் இயக்குநர் பாலா அப்போது பாலுமகேந்திராவின் உதவி இயக்குநர்.

பாலாவுடம் அன்று கிடைத்த நட்பு இப்போதும் தொடர்கிறது. சில காரணங்களால் வண்ண வண்ண பூக்கள் படத்தில் நான் நடிக்க முடியாமல் போனது. சின்னத்தாயி டேக் ஆஃப் ஆனது. ஒரு பக்கம் நடிகராக மாறினாலும் சொந்தமாக பிசினஸ் செய்வதையும் தொடர்ந்தேன். ஒரு கட்டத்தில் என்னிடம் இருந்த பீடாக் கடை, துணி வியாபாரத்தை என்னிடம் வேலை செய்தவர்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.

சின்ன வயதிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற மனநிலை இருந்ததால் எப்போதும் என் மனதுக்குள் வேலை, பிசினஸ் என்று சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும். 90-களில் ஜெராக்ஸ், எஸ்.டி.டி பிசினஸ் பிரபலம். சென்னையில் இரண்டு இடங்களில் அந்த வியாபாரத்தை ஆரம்பித்தேன். அதே சமயம் நான் நேசித்த சினிமாவும் கை கொடுத்தது. ராமன் அப்துல்லா, பொங்கலோ பொங்கல், காதலி, காதல் பள்ளி, வேலை என்று வரிசையாக படங்களில் நடித்தேன். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் எனக்குள் இருந்த பிசினஸ் மைண்ட் இயங்கி கொண்டே இருந்தது.

நாம் செய்யும் வேலையில் நம் முன்னேற்றத்தை தடுக்கும் விதமாக ஆயிரம் தடைக் கற்கள் வரும். ஆனால் தடைக்கற்களை உண்மை, நேர்மை, உழைப்பு மூலம் வெற்றிப்படிக்கட்டுகளாக மாற்றமுடியும். ஒரு காலத்தில் வேலைக்காரனாக இருந்த நான் இப்போது அறுபது பேருக்கு வேலை கொடுத்துள்ளேன். சின்ன வயதிலிருந்து வேலை செய்வதுதான் என் வேலை.