திருச்சியில வெக்காளியம்மன் கோயிலுக்கு போ. உங்க அம்மாவுக்கு எப்படி லெட்டர் எழுதுவியோ, அப்படி உன் கஷ்டத்தை எல்லாம் எழுதி அதை சூலத்துல கட்டிட்டு வந்துடு. எல்லா கஷ்டமும் விலகும்னு ஒருத்தர் சொன்னார். உடனே திருச்சிக்கு கிளம்பி போய், லெட்டர் எழுதிக் கட்டிட்டு சென்னை வந்தேன். இங்கே வந்து பாண்டி பஜார்ல இறங்கும்போது என்கிட்ட இருந்தது ஒரு ரூபா பத்து பைசா. பாண்டி பஜார்ல ஒரு கையேந்தி பவன்ல ஒரே ஒரு தோசை வாங்கி தட்டு நிறைய சாம்பார் வச்சி சாப்பிட்டேன்.

டைரக்டரே…னு ஒரு குரல்…ரொம்ப நாள் கழிச்சு என்னை ஒருத்தர் டைரக்டர்னு சொல்ல கேட்டதும் கண் கலங்கிட்டேன். கூப்பிட்டவர் கதாசிரியர் கலைமணி. உங்கள ரொம்ப நாளா தேடிக்கிட்டிருக்கேன். சாப்பாட்டிற்கு என்ன செய்றீங்க?னு கேட்டுட்டு, எனக்கு சாப்பா-டு வாங்கி கொடுத்து, கையில ஐம்பது ரூபாயும் கொடுத்தார். நாளைக்கு ஆபீஸுக்கு வாங்க. படத்த பத்தி பேசலாம். நீங்கதான் டைரக்டர்னு அவர் சொல்ல, சந்தோஷமாகிட்டேன்.

மறுநாள் அவர் ஆபீஸுக்கு நடந்தே போயிட்டேன். அங்கே கலைமணியோட பார்ட்னர்ஸ் இருந்தாங்க. பழைய விஷயங்கள் பேசி மகிழ்ந்துட்டு, அப்படியே பட விவகாரத்துக்கு வந்தோம். படத்தோட பெயர் முதல் வசந்தம். நீங்கதான் டைரக்ட் பண்றீங்க. இப்போ நேரா எல்லையம்மன் கோயில் போய், ஒரு பேப்பர்ல முதல் வசந்தம்னு டைட்டிலை எழுதி அம்மன் முன்னாடி வச்சிட்டு, நாளைக்கு நம்ம ஆபீஸுக்கு வந்துடுங்கனு கலைமணி சொன்னார்.

சொன்னபடியே செஞ்சுட்டு மறுநாள் ஆபீஸுக்கு போனேன். எல்லாரும் உம்னு இருந்தாங்க. நேத்தெல்லாம் நல்லா பேசுனாங்களே’னு யோசிக்கறேன். அதுக்குள்ள அந்த பார்ட்னர்ஸ் மூணு பேரும் டீ குடிச்சிட்டு வர்றோம்னு நாசூக்கா வெளியே போறாங்க. கலைமணி என்னைக் கூப்பிட்டு, டைரக்டரே…நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. எங்க பார்ட்னர்ஸுக்கு நீங்க டைரக்ட் பண்றது பிடிக்கலை.

மணிவண்ணன்தான் டைரக்ட் பண்ணணும்னு பிடிவாதமா இருக்காங்கனு சொல்ல, எனக்கு சங்கடமாகிடுச்சு. என் கோபமெல்லாம் எல்லையம்மன் மேல திரும்பிடுச்சு. எல்லையம்மன் கோயிலுக்கு போய் கொஞ்சநேரம் அழுதேன். ரெண்டுநாள் கழிச்சு, கலைமணி உங்களை கூட்டிட்டு வர சொன்னார்னு ஒரு பையன் வந்து கூப்பிடுறான். போனேன். அங்கே கலைமணி கூட என் அசிஸ்டென்ட் பெருமாளும் இருந்தார். எனக்கு அப்போதான் தெரியுது, கலைமணியோட தம்பிதான் பெருமாள்னு.அவங்க ஓகே பண்ணலைன்னா என்ன டைரக்டரே… நாம படம் பண்ணலாம்.

படத்துக்கு பேரு பிள்ளை நிலானு சொன்னார் கலைமணி. நான் ஏற்கனவே படம் பண்ணி தோத்தவன். நான் கேட்டா யார் கால்ஷீட் குடுப்பாங்க?னு ஆரம்பத்தில் தயங்கினேன். அது, மோகன் கொடி கட்டி பறந்த நேரம். ஆரம்பத்துல மோகன் பெங்களூருவுல இருந்தபடி பாலுமகேந்திராவோட கன்னட படம் பண்ணிட்டு, சென்னையில சான்ஸ் தேடி வந்தப்போ அவரை பாரதிராஜாகிட்ட அறிமுகப்படுத்த நான் அலைஞ்சிருக்கேன். அதான் எனக்கும் மோகனுக்கும் உள்ள நட்பு. அந்த ஒரு சின்ன நட்புல மோகனை போய்ப் பார்த்தேன்.

உனக்கு ஒருத்தர் வாய்ப்பு தர்றேன்னு சொன்னா, கண்டிப்பா நான் கால்ஷீட் தர்றேன்…வானு அவர் கார்லேயே என்னை கலைமணி வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனார் மோகன். பத்து நாள் தொடர்ந்து சாயங்காலம் 6- மணியில இருந்து நைட் கால்ஷீட் தர்றேன். பகல் கால்ஷீட் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்னு மோகன் சொல்லிட்டார்.

நளினி அப்போ பிஸி ஹீரோயின். அவங்களும் பிஸி ஷெட்யூலுக்கு இடையில நடிச்சு கொடுத்தாங்க. ராதிகாவும் அப்படியே. படத்துல ஒரு கார் வரும். அந்த காருக்கு 666-னு நம்பர் வச்சிருந்தேன். ஆளில்லாம அது தானா ஓடுற சீன் நிறைய இருக்கும். ஓவர் நைட்ல என்னை தூக்கி நிறுத்திச்சு பிள்ளை நிலா. சொல்லப் போனா, கோடம்பாக்கத்துல ஹாரர் ஃபிலிம் டிரெண்டை அது துவக்கி வச்சது… இன்னிக்கு வரை கொடி கட்டிப் பறக்குது. அந்த படத்துலதான் பேபி ஷாலினி அறிமுகம். ஆனா, ஓசைனு ஒரு படம் முன்னாடி ரிலீஸ் ஆகிட்டதால இது ரெண்டாவது படமாகிடுச்சு.

பிள்ளைநிலா படத்துல அந்த குழந்தை, மோகனோட அம்மாவை கொல்ற மாதிரி ஒரு சீன் உண்டு. அது எடுக்கறதுக்கு முதல் நாள்…மோகனோட அம்மா நிஜமாகவே இறந்துட்டாங்கனு நியூஸ். நாங்க எல்லோரும் பதறிட்டோம். பெங்களூரு போய் அம்மாவோட இறுதிச்சடங்கை எல்லாம் முடிச்சிட்டு திரும்பினேன். மறுநாள் மோகனுடைய கால்ஷீட் இருந்தது. அவர் வரமாட்டார்னு நினைச்சிருந்தேன்.

ஆனா, அவரால பட வேலைகள் தடைபட கூடாதுனு மறுநாளே வந்துட்டார். முதல் ஷாட்டே இறந்துபோன அம்மா படத்துக்கு முன்னாடி அழுற சீன்…யதார்த்தமா அந்த சீன் அமைஞ்சது. மோகனோட அந்த உழைப்பு, அர்ப்பணிப்பினால்தான் என்னாலும் இன்னிக்கு இவ்வளவு தூரம் நிக்க முடியுது. மோகனுக்கும் கலைமணிக்கும் நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேன்.