கவின் – லாஸ்லியா விஷயத்தில் நான் பயந்தது இந்த ஒரு விஷயத்துக்காகதான் என இயக்குநர் சேரன் தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சேரன், சக போட்டியாளர்களிடம் ஒரு குடும்ப உறுப்பினர் போல பழகினார். இதனால் அனைத்து ஹவுஸ்மேட்களும் அவரை உறவு முறை சொல்லியே அழைத்தனர்.

அவர்களின் சேரப்பா என்ற அடையாளத்தை தந்தவர் லாஸ்லியா. சேரனை பார்க்க தனது அப்பாவை போன்று இருப்பதாக கூறி அவரை சேரப்பா என்று அழைக்கத் தொடங்கினார். மகள் பாசம் அதிகம் கொண்ட சேரன், லாஸ்லியாவை தனது மகளாக ஏற்றுக்கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நாட்களிலேயே கவின் மீது காதல் கொண்டார் லாஸ்லியா. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். இந்நிலையில் இருவரும் இந்த விஷயத்தை வெளியில் போயி பார்த்துக்கொள்ளலாம் இப்போது விளையாட்டில் கவனம் செலுத்துங்கள் என்று அட்வைஸ் செய்தார் சேரன்.

இதனால் கடுப்பான கவின், சேரன் தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்து அவருடன் நான் சிங்கிலேயே இருந்து வந்தார். கவின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சேரனை உண்டு இல்லை என செய்தனர். இதனால் கவின் மற்றும் லாஸ்லியா பெயரை இனி தன்னுடைய நாக்கு உச்சரிக்காது என்றார் சேரன்.

இதன் பின்னரும் கூட கவினும் லாஸ்லியாவும் தங்களின் ரசிகர்களை கட்டுப்படுத்தவில்லை. இந்நிலையில், இயக்குநர் சேரன் தனியார் இணையதள சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, பிக்பாஸ் வீட்டில் எல்லோரிடத்திலும் தனிப்பட்ட அக்கறை காட்டினேன். ஏன் கவினிடம் கூட அப்படித்தான் இருந்தேன்.

ஆனால் ஒவ்வொருவருடைய புரிதலும் மாறும் இல்லையா? ஒரு சிலர் கேம்க்காக இப்படி செய்கிறேன் என்று புரிந்து கொண்டார்கள். அதை அவர்களே ஒரு நாள் புரிந்துகொள்வார்கள். லாஸ்லியா என்னை அப்பா என்று அழைப்பதை நான் ஒப்புக்கொண்டதற்கு காரணம், அவர் தனது அப்பாவைப் பார்த்து 10 வருடமாகிவிட்டது என்று சொன்னதுதான். அந்த வலியை உணர்ந்ததால் தான் அதை ஏற்றுக் கொண்டேன்.

லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்து 50 நாட்களுக்கு பிறகு கவினுடன் ஒரு ஈர்ப்பு வருகிறது. தங்களது எதிர்காலத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது அவர்களது வயதின் வெளிப்பாடு. அவர்களின் ஈர்ப்பால் எனக்கு இருந்த பயம், அது அவர்களின் பெற்றோரை எப்படிப் பாதிக்கும் என்பதுதான். நான் ஒரு பெற்றோராக இருந்துதான் அதை உணர்கிறேன். கவினுடைய பெற்றோரை நினைத்தும் நான் வருத்தப்பட்டேன்.

வெளியிலிருக்கும் பெற்றோர்கள் என்ன மாதிரியான சங்கடங்களை எதிர்கொள்வார்கள் என்று நினைத்ததால் தான் உள்ளே இருக்கும் போது வேண்டாம், குறைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.
கவின் இந்த விஷயத்தில் தான் என்னைத் தவறாக புரிந்து கொண்டார். நான் டிராமா பண்ணுவதாக நினைத்தார்.

அவர்களின் காதலை வைத்து நான் பெயர் எடுத்துக் கொள்வதாக நினைத்தார். அது எனக்கு வருத்தமாக இருந்தது. நான் பல படங்களை இயக்கி பெயர் வாங்கி விட்டேன். இதை வைத்து பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையிலேயே எனக்கு அவர்களின் மீதான அக்கறையை விட அவர்களின் பெற்றோர் மீதே அதிக அக்கறை இருந்தது இவ்வாறு சேரன் தெரிவித்திருக்கிறார்.