தமிழ் சினிமாவின் மதிப்பிற்குரிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சத்யஜோதி தியாகராஜன். ரஜினியின் இமேஜுக்கு ஜனரஞ்சக உயிர் கொடுத்தவர். கமலோடு ஆழ்ந்த நட்பு கொண்டவர். பேச்சில் தெறிக்கும் பக்குவத்தோடு நிதானமாக தமிழ் சினிமாவைக் காட்சிப்படுத்திய தியாகராஜனின் சந்திப்பு அருமையானது.

எங்க அப்பா வீனஸ் கோவிந்தராஜன். அவருடைய நண்பர்கள் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி, டைரக்டர் ஸ்ரீதர். முதன் முதலாக அமரதீபத்தில் தங்கள் பயணத்தை மூன்று பேரும் ஆரம்பிச்சாங்க. படம் பெரிய ஹிட். தொடர்ந்து உத்தமபுத்திரன், கல்யாண பரிசு’னு நல்ல படமாகவும், நல்ல வசூலும் கிடைத்த சமயம். ஒரு கட்டத்தில் ஸ்ரீதர் பிரிஞ்சு போய் சித்ராலயா ஆரம்பிச்சிட்டார். பிறகு வீனஸ் பிக்சர்ஸ் தமிழ், தெலுங்குன்னு பெரிய வட்டமாக விரியிறாங்க. பிறகு சரிவை சந்திக்கிறாங்க.

நான் அப்போது கலிபோர்னியாவில் படிச்சிட்டு இருந்தேன். அந்த சமயம் பட்ட பாடு சொல்லி தீராது. தம்பி, கரண்ட் பில் கட்டலைடா, ஏற்பா-டு பண்ணு…னு அம்மா போன்ல சொல்வாங்க. நொந்து போயிட்டேன். அந்த சமயம் ரொம்ப உதவியாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் சார். எம்ஜிஆர் கூப்பிட்டு அனுப்பி அப்பா போய் பார்த்தார்.

உங்க நிலைமை புரியுது. கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு ஒரு படம் பண்ணித் தரேன்…னு சொல்லி, கம்பெனிக்கு சத்யஜோதி பிலிம்ஸ்னு அவரே பெயர் வைத்தார். ஆனா, அப்ப பார்த்து அவர் அரசியலில் இறங்கிவிட்டதால் எங்களுக்கு படம் பண்ணி தர முடியலை. சத்யஜோதி’ நிறுவனத்தையும் அதே நேரத்தில் ஆரம்பிச்சேன்.

அப்போது மணிரத்னம் சிபாரிசு செய்து பாலுமகேந்திராவை வைத்து ஒரு படம் செய்தோம். அதுதான் மூன்றாம் பிறை. விநியோகஸ்தர்களுக்கு படம் போட்டுக் காண்பிச்சோம். அப்ப கமல் சகலகலா வல்லவன் மாதிரியான படங்களில் நடிச்சுக்கிட்டு இருந்த காலம். படத்தைப் பார்த்த சில பேர் ‘ரொம்ப கிளாஸா இருக்கு. ஓடாதுனு சொல்லிட்டாங்க. ஆனால், படம் பெரும் வெற்றி. சிட்டியில் ஒரு வருஷம் ஓடுச்சு. பிறகு ரஜினிக்கு ஆறு படம், கமலுக்கு இரண்டு படம்னு செய்திட்டோம்.

ஒருநாள் நாச்சியப்பன் சார் பாக்யராஜை கூட்டிட்டு வந்தார். அவர் கதை சொல்லி நாங்க இம்ப்ரஸ் ஆகிட்டோம். அவ்வளவு சிம்பிளாக இருந்தார். அவருக்கு நடிக்க, கதை, வசனம் எழுதி டைரக்ட் செய்ய ஒரு லட்சம்தான் கேட்டார். அந்தப் படம்தான் அந்த ஏழு நாட்கள். பணக்காரன் படத்துக்காக ரஜினிக்கு ஒரு சம்பளம் பேசி முடிச்சிட்டோம். அப்ப தளபதிக்காக ஜீவி. வந்து ரஜினிக்கு சம்பளம் பேசிட்டு, கூடவே பெரிய தொகையை சேர்த்து கொடுத்திட்டு போயிட்டார்.

உங்களுக்கு வேற மார்க்கெட் இருக்குனு ரஜினி சாரிடம் சொல்லிட்டார். ரஜினி சார் மனதில் ஏதோ பதிவாகிவிட்டது. அவர் disturb-ல் இருக்கார்…னு பி.வாசு சொன்னார். ரஜினி வர சொல்ல நான் போனேன். ஜீ.வி. வந்தார். அப்படி இப்படின்னு சொன்னார்னு சொன்னார். நான் உடனே ரஜினிகிட்டே ஜீ.வி ஒரு Proposal Maker. ஆர்.எம்.வீ. அப்படியில்லை. அவர் விநியோகஸ்தர்கள்களிடம் பேசிட்டார்.

பேசினது பேசினதுதான். திருப்பி அவங்ககிட்டே போக மாட்டார். இருந்தாலும் உங்களுக்கு என்ன வேணுமோ அதை செய்து தருகிறேன் என்றேன். கொஞ்சம் யோசிச்ச ரஜினி நமக்குள்ள எதுவுமே நடக்கலை. மறந்துடுங்க. ஆர்.எம் வீ. கிட்டே எதுவும் போக வேண்டாம்னு சொன்னார். அவ்வளவு நேர்த்தியானவர் ரஜினி.

தங்கமகன் தயாரிக்கும்போது ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை. போட்டிருந்த செட் ரெண்டு மாசமா நின்னுபோச்சு. உடம்பு சரியானதும் முடிச்சோம். பாக்கி தொகையை கொண்டு போய் கொடுத்தோம். இல்லை, என்னால கொஞ்சம் லேட் ஆகிவிட்டது. திருப்பி வாங்கிக்கங்க…ன்னு சத்ய நாராயணாகிட்ட பணத்தை கொடுத்துவிட்டார். ஆர்.எம்.வீயோ இதை அடுத்த படத்திற்கு அட்வான்ஸ்…னு சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். ரஜினி அந்த அளவுக்கு ஜென்டில்மேன். அவரை வைச்சு நாங்க எடுத்த அடுத்தபடம்தான் மூன்று முகம்

எங்களின் விவேகம் படத்துக்கு பிறகு விசுவாசத்திலும் அஜித் நடித்தார். எவ்வளவு பணிச்சுமையிலும் உடல் நலத்தை அடுத்த இடத்தில் வைத்து விட்டுத்தான் நடிக்கிறார். கஷ்டமான சூழலிலும் இப்படி மனமுவந்து நடித்துக்கொடுப்பது பெரிய குணம். அவரை எந்த நேரம் வேண்டுமானாலும் நடிக்க அழைக்கலாம். சந்தோஷமாக நடித்து கொடுப்பார்.

படம் நன்றாக வர வேண்டும் என்பதுதான் அவரது ஒரே நினைவாக இருக்கும். அவரோடு நடிக்க ஒவ்வொரு நடிகர்களும் விரும்புகிறார்கள். அவரது உபசரிப்பு தன்னிகர் இல்லாதது. ஏதாவது ஒரு நாள் வேலை சற்று குறைவாக இருக்கும்போது மொத்த யூனிட்டுக்கும் அவரே சமைத்து உணவை பரிமாறுவார்.நான் கூட இருந்து பார்த்தவரையிலும் அவர் உழைக்க தயங்கி ஒரு நாளும் பார்த்ததில்லை