படத்தில் உயர் காவல்துறை அதிகாரி எப்படி தனக்கு கிழே பணிபுரியும் ஒரு பெண் காவல்துறை அதிகாரியை, தனது சொந்த பகைக்காக கொடுமைப்படுத்துகிறார் என்பது தான் இந்த படத்தின் முக்கியமான கதைக் கரு

பவானி ஆற்றங்கரையில் நடைபெறும் முக்கூட்டு திருவிழா. அந்த விழாவுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு மந்திரி வருவதால் பாதுகாப்புக்கு பெண் போலீசான ஸ்ரீபிரியங்கா நிறுத்தப்படுகிறார். அவரை அடைய துடிக்கும் இன்ஸ்பெக்டரான முத்துராமன் அவரை பழிவாங்குவதற்காக ஒரு பாலத்தின் நடுவில் நிறுத்தி விடுகிறார்.

நேரம் ஆக ஆக ஸ்ரீபிரியங்காவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. ஆனால் முத்துராமனின் பழிவாங்கலால் அவரால் சிறு ஓய்வு கூட எடுக்க முடியாத சூழல். சக போலீஸ்காரர்களான ஈ.ராம்தாஸ், வீகே.சுந்தர், சரவண சக்தி ஆகியோராலும் எதுவும் செய்ய முடியாத சூழல். கடும் உடல் உபாதைக்கு ஆளாகும் ஸ்ரீ பிரியங்கா என்ன ஆகிறார் என்பதே கதை.

விமா்சனம்

பெண் காவல் அதிகாரி ஒரு பாலத்திற்கு மேல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். காலை முதல் மாலை வரை அவர் அனுபவிக்கும் சங்கடங்களை, சந்திக்கும் மனிதர்களை, உடல் ரீதியான பிரச்சனைகளை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் சிறப்பாக செய்திருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா.

காவல் பணியில் சந்திக்கும் அவலம் ஒரு புறம், தந்தை மற்றும் அக்காவை பறிகொடுத்து அக்காவின் மகளை, தனது குடிகார மாமனிடம் இருந்து பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பான பெண்ணாக ஒரு புறமும், காதலியாக மறுபுறமும் சிறப்பாக நடித்துள்ளார் ஸ்ரீ பிரியங்கா. இப்படம் அவருக்கு நிச்சயம் ஒரு நல்ல பெயரை தமிழ் சினிமாவில் பெற்று தரும்.

ஸ்ரீ பிரியங்காவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் இன்ஸ்பெக்டராக வழக்கு எண் முத்துராமன். பார்வையாலேயே வில்லத்தனத்தில் கலக்கி இருக்கிறார். அவரது சதி செயல்கள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. சீரியசான படத்தை கலகலப்பாக நகர்த்துவது ஈ.ராம்தாஸ் தான். சக போலீஸ்காரராக தனது ஒருவரி பன்ச் வசனங்களால் கைதட்ட வைக்கிறார். இயல்பான நடிப்பு அனுபவத்தை காட்டுகிறது.

டிரைவராக வரும் வீகே.சுந்தர் தனது நடிப்பால் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். சரவண சக்தியும் சிரிக்க வைக்கிறார். சக போலீசுக்கே உதவ முடியாத நிலையை மூவருமே இயல்பாக பிரதிபலிக்கிறார்கள். ஸ்ரீ பிரியங்காவின் காதலராக ஹரிஷ் குமாரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். காதலிக்காக ஆம்புலன்சை எடுக்க முயற்சிக்கும்போது வேலை தடுக்கவே கடமைக்கு முக்கியத்துவம் தரும் இடத்தில் நெகிழ வைக்கிறார்.

உயர் அதிகாரி முத்துராமனுக்கு மேல் அதிகாரியாக நடித்துள்ளார் சீமான். அவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார். இப்படத்தில், பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் அவலங்களை எடுத்து சொல்லும் ஒரு பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது. இப்பாடல் வரிகளை எழுதியவர் இயக்குனர் சேரன். இஷான் தேவ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பலம்

இஷானின் இசையும் பாலபரணியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. எளிதில் கடந்து செல்லும் பெண் போலீசாரின் வாழ்க்கைக்குள் நுழைந்துவந்த உணர்வை கதை வசனம் எழுதிய ஜெகனும் திரைக்கதை எழுதி இயக்கிய சுரேஷ் காமாட்சியும் ஏற்படுத்தி இருக்கின்றனர்.

முக்கிய பாலங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் போலீஸ்காரர்களை பார்த்தால் நாம் இயல்பாக கடந்து செல்வோம். இனி அப்படி கடக்க முடியாது. இது ஒன்றே இந்த மிக மிக அவசரம் நெற்றிப்பொட்டில் அடித்து சொல்லும் உண்மை.

பஞ்ச்

மொத்தத்தில் மிக மிக அவசரம் – மிக மிக அவசியமான ஒரு படைப்பு.

மதிப்பெண் :60% 100