தமிழ் சினிமாவில் பிரமாண்ட தயாரிப்பாளர்கள் அவ்வப்போது தோன்றி கொண்டே இருப்பார்கள். நின்று நிதானமாக படம் தயாரித்து நிலைத்து நிற்பவர்கள் ஒரு வகை. வந்த வேகத்தில் காணாமல் போகிறவர்கள் இன்னொரு வகை. இதில் இரண்டாம் வகையை சேர்ந்தவர் கே.டி.குஞ்சுமோன். மற்ற பிரமாண்ட தயாரிப்பாளர்களுக்கும், இவருக்கும் சில வித்தியாசங்கள் உண்டு.

முதன் முறையாக ஒரு தயாரிப்பாளர் படத்தின் புரமோசன்களில் தன் படத்தை போட்டுக் கொண்டது முதன் முதலில் இவர்தான். சிரித்தபடி மீசையில் கை வைத்திருக்கும் இவர் படத்தை பார்த்த உடனேயே சொல்லிவிடலாம் இது பிரமாண்ட படம் என்று. அது மட்டுமல்ல, தான் தயாரித்த ஜெண்டில்மேன் என்ற படத்தின் பெயரையே தனது பெயரின் அடையாளமாகவும் வைத்து கொண்டவர். ஜெண்டில்மேன் கே.டி.குஞ்சுமோன் என்றே பின்னாளில் அழைக்கப்பட்டார். அவர் வளர்ந்த கதையையும், வீழ்ந்ததையும் பார்க்கலாம்.

கேரளாவை சேர்ந்தவர் கே.டி.குஞ்சுமோன். செல்வச் செழிப்பு மிக்க குடும்பம். குடும்பத்தின் பரம்பரை தொழிலான பிசினசையே இவரும் செய்தார். ஹோட்டல், டிராவல்ஸ்னு இறங்கி நிறைய பணம் சம்பாதித்தார். சில சினிமா நண்பர்கள் மூலம் சினிமா ஆசையும் வந்தது. அது படம் தயாரிக்கும் ஆசையோ, நடிக்கும் ஆசையோ இல்லை. அதையும் பிசினசாகவே செய்தார். தமிழ் படங்களை வாங்கி கேரளாவில் விநியோகம் செய்தார்.

அதன் மூலம் சினிமாவுக்கு இன்னும் நெருக்கமானார். மற்றவர்கள் தயாரிக்கும் படத்தை நாம் வெளியிடுவதை விட நாமே படத்தை தயாரித்தால் என்ன என தோன்றியது. வசந்தகால பறவை படத்தை தயாரித்தார். ரமேஷ் அரவிந்த், ஷாலு நடித்தனர். பவித்ரன் இயக்கினார். படம் அவருக்கு லாபம் தந்து விடவே, அவர் பார்த்து கொண்டிருந்த மற்ற பிசினசை விட இது நல்ல பிசினாகத் தெரியவே முழுநேர தயாரிப்பாளர் ஆனார். மீண்டும் பவித்ரன் இயக்கத்தில் சூரியன் படத்தை பிரமாண்டமாக தயாரித்தார்.

சரத்குமார், ரோஜா நடித்த படம் பெரிய வெற்றி பெற்றது. சரத்குமார் கமர்ஷியல் ஹீரோ ஆனதும், பிரபுதேவா பிரபலம் ஆனதும் இந்த படத்தில்தான். அதன்பிறகு இயக்குனர் பவித்ரனுக்கும், கே.டி.குஞ்சுமோனுக்கும் இடையில் கருத்து வேறுபா-டு ஏற்படவே இருவரும் பிரிந்தனர். அடுத்து பவித்ரன் இல்லாமல் பெரிய பட்ஜெட்டில் ஒரு படம் எடுக்க சபதம் பூண்டார் குஞ்சுமோன்.

அப்போது ஸ்டில்ஸ் ரவி, குஞ்சுமோனிடம் அழைத்து வந்தவர்தான் ஷங்கர். இந்த பையன் பேரு ஷங்கர். ஒரு நல்ல கதை வச்சிருக்கான். ஆனால் யாரும் தயாரிக்க முன் வரலை. பையனுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் இருக்காங்க என்று கூற மனமிரங்கிய குஞ்சுமோன் தயாரித்த படம்தான் ஜென்டில்மேன்.

ஏற்கனவே வசந்தகால பறவை, சூரியன் படங்களில் அசோசியேட்டாக ஷங்கரின் உழைப்பை குஞ்சுமோன் நேரிலேயே கண்டிருக்கிறார். படத்தை இயக்க ஷங்கர் வாங்கிய சம்பளம் 50- ஆயிரம் ரூபாய். அப்போதைக்கு இது பெரிய சம்பளம். ஷங்கர் புது பையனாக இருக்கிறார் என்று சரத்குமாரும், டாக்டர் ராஜசேகரும் நடிக்க மறுத்துவிட வேறு வழியில்லாமல் அர்ஜுனை நடிக்க வைத்தார்.

படம் பெரிய பட்ஜெட் என்பதால் வீட்டை அடமானம் வைத்தார். படம் தயாராகி முடிந்ததும் அர்ஜுன் நடித்திருக்கும் படம் என்பதால் யாரும் வாங்கத் தயாராக இல்லை. அப்போது உதவியவர் இன்னொரு பெரிய தயாரிப்பாளரான ஜி.வெங்கடேஸ்வரன்.

அவரது முயற்சியால் படம் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது. குஞ்சுமோன் பெயருக்கு முன்னால் ஜெண்டில்மேன் ஒட்டிகொண்டது. ஷங்கருக்கு காரும் வீடும் வாங்கி கொடுத்தார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஸ்கூட்டர் வாங்கி கொடுத்தார். பிரமாண்ட தயாரிப்பாளர் என்ற இமேஜ் உருவானது. தமிழ் சினிமாவில் தனிப்பெரும் ராஜாவாக வலம் வர தொடங்கினார். பட விழாக்களுக்கு குஞ்சு மோன் வருகிறார் என்றால் பரபரப்பு தொற்றி கொள்ளும்.

அடுத்தும் ஷங்கர் இயக்கத்தில் படம் தயாரிக்க விரும்பினார் குஞ்சுமோன். என்ன கதைய வேணாலும் எடு, யாரை வேணாலும் நடிக்கவை. ஆனால் ஹீரோ பிரபுதேவா, என்று அவருக்கு எந்த இயக்குனரும் அதுவரை வாங்கியிராத தொகையை சம்பளமாகப் பேசி 5-லட்சம் அட்வான்ஸ் கொடுத்தார். பிரபு தேவாவை சிபாரிசு செய்ய காரணம் அவரது தந்தை சுந்தரம் மாஸ்டர், என் மகனை எப்படியாவது நடிகனாக்குங்கள் என்று அவர் ஆபீசுக்கு நடையாக நடந்ததுதான்.

ஆனால் இன்னொரு காரணம் உண்டு. தான் யாரை நினைக்கிறோமா அவர்தான் ஹீரோ என்ற எண்ணம் அப்போது குஞ்சுமோனுக்கு இருந்தது. பிரபுதேவா முகத்தை மூணு மணி நேரம் யார் உட்கார்ந்து பார்ப்பார்கள் என்று விநியோகஸ்தர்கள் சொன்னபோது, அவன்தான் ஹீரோ, வேணும்னா படத்தை வாங்கு இல்லாவிட்டால் விட்டுவிடு என்று சொன்னவர் குஞ்சுமோன்.

காதலன் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி, பெரிய வெற்றி பெற்றது. குஞ்சுமோனுக்கு நான்காவது தொடர் வெற்றி. அடுத்தும் ஷங்கருடன் படம் பண்ண விரும்பினார். ஆனால் ஷங்கர் விலகினார். குஞ்சுமோனின் அளவுக்கு அதிகமான தலையீடே ஷங்கர் விலக காரணம் என்றார்கள். ஷங்கர் விலகியது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது குஞ்சுமோனுக்கு.

அடுத்து யாரை வைத்து படம் எடுப்பது என்கிற தயக்கம் இருந்தது. அப்போது விஜய் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். அவரது அடுத்த டார்கெட் விஜய்யாக இருந்தது. அதுதான் அவர் எடுத்த தவறான முடிவாகவும் அமைந்தது. விஜய் நடிக்க நிலாவே வா, என்றென்றும் காதல் என்று இரு படங்களைத் தயாரித்தார். இரு படங்களும் பெரும் தோல்வி அடைந்தன. முந்தைய படங்களில் சம்பாதித்த பணத்தை இழந்தார். அதன் பிறகு அவரால் படம் தயாரிக்க முடியவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகனை ஹீரோவாக்க ஆசைப்பட்டு கோட்டீஸ்வரன் என்ற படத்தைத் தயாரித்தார். அந்த படத்தை இன்று வரை அவரால் வெளியிட முடியவில்லை. இப்போது சென்னையில் பேரன் பேத்திளோடு அமைதியாக வாழ்ந்து வருகிறார். எல்லோருக்கும் உதவிய எனக்கு யாரும் உதவவில்லை என்கிற மனவலியோடு வாழ்கிறார் இந்த ஜெண்டில்மேன்.