அரியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி 18 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தை சேர்ந்த ஷிவானி என்கிற 5 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மாயமாகியுள்ளார்.

இரவு 8:30 மணியை தாண்டியும் மகள் வீடு வந்து சேராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது திறந்த வெளியில் இருந்த 50 அடி ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்திருக்கலாம் என சந்தேகித்து ஒரு கைபேசியில் கயிற்றை கட்டி உள்ளே அனுப்பினர்.

வீடியோ பதிவில் உள்ளே சிறுமி சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைக்கு துவங்கியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் தேசிய மீட்பு படை அதிகாரிகள் முதலில் கயிற்றை கட்டி குழந்தையை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

குழந்தை தலைகீழாக விழுந்திருந்தால் ஆரம்ப கட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இதனையடுத்து, சிறுமியை வெளியே இழுக்க வேறு வழிமுறைகளை முயற்சித்தனர். இறுதியில் பக்கவாட்டில் குழி தோண்டி திங்களன்று ஷிவானி வெளியே எடுக்கப்பட்டார். ஆனால் குழந்தையின் உடல் அசைவு எதுவும் காணப்படவில்லை.

உடனே கல்பனா சாவ்லா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக 2 வயது குழந்தை சுஜித் வில்சன், தமிழ்நாட்டின் நாடுகட்டுப்பட்டி கிராமத்தில் ஒரு போர்வெல்லில் தவறி விழுந்தார். துரதிர்ஷ்டவசமாக, மீட்பு நடவடிக்கையின் நீண்ட மணிநேரங்களுக்குப் பிறகு, இறந்த நிலையில் அவருடைய உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.