சமூக வலைதளங்களில் தனிநபர் ரகசியம் காப்பதில் உள்ள விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதற்கான மசோதாவை முன்மொழிந்துள்ளார் அமெரிக்க செனட்டரான ரான் வைடன்.

இதனால் பேஸ்புக், கூகிள் உள்ளிட்ட பெருநிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சை மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டவர்கள் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் தனிநபர் ரகசியம் காப்பதில் உள்ள விதிமுறைகளை மீறிய பேஸ்புக் நிறுவனத்துக்கு ₹34,500 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தகவல் திருட்டு குறித்து தங்களுக்கு தெரிந்திருந்தும் அதை பயனாளர்களுக்கு தெரிவிக்க தவறியதற்காக கூறி அமெரிக்காவில் உள்ள மத்திய வர்த்தக கமிஷன் பேஸ்புக் நிறுவனத்திற்கு இந்த அபராத தொகையை விதித்தது.

ஆனால் 5 பில்லியன் டொலர் என்பது அந்த நிறுவனத்தை பொறுத்தமட்டில் பெரிய தொகையே அல்ல என விமர்சனம் எழுந்தது.

அதேபோல செப்டம்பர் மாதம், சிறார்களுக்கான தனியுரிமை பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக கூறி YouTube நிறுவனத்திற்கு 170 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே செனட்டர் ரான் வைடன் புதிய சட்ட மசோதாவுக்கு முன்மொழிந்துள்ளார்.

அமெரிக்கர்களின் தனியுரிமையை எப்போதும் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்டவர்கள் கருத்தில் கொண்டது இல்லை எனவும், ஆனால் தமது சட்ட மசோதா அமுலுக்கு வந்த பின்னர் அவர்களால் தவறிழைக்க முடியாது எனவும், அப்படி நடந்தால் கண்டிப்பாக அவர்கள் சிறை வாசம் அனுபவிப்பார்கள் எனவும் ரான் வைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தால் நிறுவன தலைவர்களுக்கு 10 முதல் 20 ஆண்டுகள் சிறையும், விதிமுறைகளை மீறும் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஆண்டு வருவாயில் 4 விழுக்காடு அபராதமும் விதிக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் கூகிள் தமிழர் சுந்தர் பிச்சை மற்றும் பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட ஜாம்பவான்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.