சிக்கன், மட்டன், மீன் என அசைவ உணவுகளுக்கு அடிமையாகிப் போனவர்கள் ஏராளம்… நாவூறும் மணமணக்கும் சுவையான உணவை பிடிக்காமலா போகும்.

இப்படியான ருசியான உணவை செய்வது எப்படி என யூடியூப்பில் பதிவேற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார் ஆறுமுகம்.

Village Food Factory என்ற யூடியூப் சேனலுக்கு 30 லட்சத்துக்கு அதிகமான சந்தாதாரர்கள்.

யார் இந்த ஆறுமுகம்?

தமிழ்நாட்டின் போடி ஜக்கம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், இவரது மகன் கோபிநாத், டிப்ளமோ படித்திருக்கிறார்.

குடும்பம் வறுமையில் இருந்ததால் ஆறாம் வகுப்பிலேயே படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்ற ஆறுமுகம் பெயிண்டர், ஏலக்காய் தோட்ட தொழிலாளி, குடை ரிப்பேர் செய்பவர் என பல வேலைகளை செய்துள்ளார்.

எடுத்த பணி எதுவாக இருந்தாலும் நஷ்டமாகிப் போக குடும்பம் கஷ்டத்தில் இருந்துள்ளது.

இந்நிலையில் டிப்ளமோபடித்துவிட்டு சினிமா ஆசையுடன் சென்னை வந்த இவரது மகன் கோபிநாத்துக்கு கனவு கைகூடாமல் போக தேனிக்கு வந்துள்ளார்.

அப்போது தான் யூடியூப்பில் ஏதாவது செய்யலாம் என தோன்றியுள்ளது, ஆறுமுகம் சமைப்பதில் வல்லவர் என்பதால் அதையே தெரிவு செய்துள்ளார் கோபிநாத்.

மகனின் ஆசைக்காக ஆறுமுகமும் சம்மதம் தெரிவிக்க விதவிதமான அசைவ உணவுகளை சமைத்து அதை வீடியோவாக பதிவேற்றியுள்ளனர்.

மாட்டிறைச்சி குழம்பு, ஆட்டு குடல் குழம்பு, இறால் குழம்பு ,வாத்து கறி என இவர்களது பட்டியல் நீண்டு கொண்டே சென்றதாம்.

இப்படி விதவிதமாக சமைப்பதற்கு சொல்லிக் கொடுத்தது சுப்பம்மா என்பவராம், ஏலக்காய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது சமையல் கலையை கற்றுக்கொண்டதாக கூறுகிறார் ஆறுமுகம்.

முதல் மாதம் 7 ஆயிரம் ரூபாய் வருமானமான வர, அடுத்த மாதம் 40 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

அடுத்தடத்த மாதங்களில் லட்சங்களில் சம்பளம் வந்ததை கொண்டு சொந்தமாக வீடொன்றை வாங்கியுள்ளதாக பெருமிதம் கொள்கிறார் டாடி ஆறுமுகம்.