விஜய்யின் பிகில் படத்தில் என்ன மாதிரியான காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன, எந்தெந்த வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப் படங்களைத் தந்த விஜய் – அட்லீ கூட்டணி பிகில் படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தில், விஜய்யுடன் இணைந்து விவேக், நயன்தாரா, கதிர், இந்துஜா, அம்ரிதா, வர்ஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்திற்கு இசை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். எனவே, படம் மீதான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது.

பெண்களுக்கான கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு பிகில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே நமக்கு தெரிந்தது தான்.
ஆனால் டிரெய்லரிலேயே ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருந்தது. இப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதால், ஆக்சனும் இருமடங்காக உள்ளது போலும். இதனால் படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிகில் படத்தில் இருந்து என்னென்ன காட்சிகளை சென்சாரில் அதிகாரிகள் நீக்கியுள்ளனர் என்பது குறித்து தெரிய வந்துள்ளது. படத்தின் ஆரம்பத்திலேயே சென்சார் போர்டுக்கு நன்றி என தெரிவிக்கப்பட்டிருந்ததாம். அதனை நீக்கி விட்டார்கள். அதேபோல், மற்றொரு காட்சியில் கத்தியால் குத்தும் போது ரத்தம் பீறிட்டு வரும் படி இருந்ததாம். அந்தக் காட்சியையும் நீக்கி விட்டனர்.

இது தவிர ஒழுக்கம் கருதி படத்தில் இரண்டு கெட்ட வார்த்தைகளை மியூட் செய்துள்ளனராம். மேலும், சர்ச்சைகளைத் தவிர்க்க டெல்லி மற்றும் கோர்ட் என்ற வார்த்தைகளையும் மியூட் செய்து விட்டார்களாம். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது மெர்சல் மாதிரியே பிகிலும் தெறிக்க விடும் எனத் தெரிகிறது.

பிகில் தீபாவளி ரிலீஸ் என்பது ஏற்கனவே நமக்குத் தெரியும். இம்முறை தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு முன்னரே பிகில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்சார் முடிந்து விட்ட நிலையில், இன்னும் ஓரிரு தினங்களில் பிகில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.