திருச்சி நகைக்கடை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி முருகனுடன் பிரபல தமிழ் நடிகைக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்ததாக காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ம் திகதி சுவரை துளையிட்டு கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மணிகண்டன், சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான முருகன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பல கிலோவை பொலிசார் கைப்பற்றியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முருகன் கொள்ளையடித்த நகைகள் மற்றும் பணத்தில் தனக்கு பிரித்த பங்கில் சிலவற்றை சினிமா தயாரிப்பில் பயன்படுத்தி வந்ததும், மேலும் சில நடிகைகளுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகையின் பெயர் அடிபடுவதால் பொலிசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாநகர பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் பிரபல இளம்வயது நடிகையுடன் முருகனுக்கு தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதே நேரத்தில் முருகனிடம் நடிகைகள் தங்களது தரத்தை விட்டு கீழே இறங்கி பழகுவார்களா? என்பது சந்தேகமாக உள்ளது.

முருகனை பொலிஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் குறித்த நடிகையின் பெயர் குறித்து தெரியவரும் என கூறியுள்ளார்.