பத்து பக்க டயலாக்கைக்கூட ஒரே டைட் க்ளோஸப்பில் கண்களால் பேசி விடுவது சரிதா ஸ்பெஷல். தண்ணீர் தண்ணீர், அக்னி சாட்சி, மௌன கீதங்கள்’ என சரிதாவின் படங்கள் அத்தனையும் இந்தத் தலைமுறை ஹீரோயின்களுக்கு ஆக்டிங் என்சைக்ளோபீடியா. கடைசியாக இனம் படத்தில் நடித்து, துபாய் சென்று தங்கிவிட்ட சரிதா, சமீபத்தில் சென்னை வந்திருந்தார். இனிக்க இனிக்க பேச்சும் புன்னகையுமாகத் தொடங்கிய சந்திப்பு, விசும்பலும் கண்ணீரு மாகக் கரையும் என நாம் எதிர்பார்க்க வில்லை.

ரொம்ப நல்லா இருக்கேன்னு சொல்ல ஆசை. ஆனா, அதுக்கான சூழ்நிலை சமீபகாலமா எனக்குக் கிடைக்கல. என்னையும் என் கணவர் முகேஷையும் தமிழ், மலையாள மக்களுக்கு நல்லா தெரியும். எங்களுக்குள்ள பிரிவினை வந்து கோர்ட்டுக்கு டைவர்ஸ் கேஸ் வந்ததும் எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதுக்கப்புறம் நடந்த கதை ஒரு சினிமாவையே மிஞ்சுற அளவுக்கு நம்ப முடியாதது.

25-வருஷங்களா அவருக்காக நான் எவ்வளவோ அட்ஜஸ்ட் பண்ணியிருப்பேன். திருமண வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்டமா இருந்துச்சுன்னு கூட சொல்லலாம். என் நடிப்பு, சினிமா வாழ்வு, செல்வாக்கு எல்லாத்தையும் மறந்துட்டேன், துறந்துட்டேன். சாதாரண இல்லத்தரசியா எளிமையா வாழ நினைச்சேன். வீட்டுப் பிரச்னை வெளியே தெரியகூடாது. மீடியாகிட்ட பேசக்கூடாதுன்னு எல்லா பொண்ணுங்க மாதிரியும் நினைச்சு அவர் கொடுமைகளை எல்லாம் சகிச்சுக்கிட்டேன். பொறுக்க முடியாம டைவர்ஸ் கேட்டுப் போனப்போ, என் பசங்க ரெண்டு பேரும் தடுத்தாங்க.

அப்பாவுக்கு இதயத்துல சின்னதா ஒரு ஹோல் இருக்கு. அவரை நாம பார்த்துக்கணும்மா ன்னு கேட்டுக்கிட்டாங்க. அதனால சென்னை குடும்பநல கோர்ட்டுல போட்டிருந்த விவாகரத்து வழக்கை 2011- ஜூன் 26-ம் தேதி நான் வாபஸ் வாங்கிட்டேன். அவரோட வாழ வேண்டாம். அதுக்காக டைவர்ஸ்னு வெட்டி விடவும் வேண்டாம். அப்பான்னு சொல்லிக்க என் பிள்ளைகளுக்கு அவர் வேணும். இதுதான் என் பாயின்ட். ஆனா, அவர் அதைப் புரிஞ்சுக்கல. நான் பயந்துட்டதாவோ, பின் வாங்கிட்டதாவோ நினைச்சு, அதையே சாதகமா எடுத்துக்கிட்டார்.

2013-அக்டோபர்ல வீட்ல என் பசங்களோட டி.வி பார்த்துட்டு இருக்கேன். மலையாள நடிகர் முகேஷுக்கு கல்யாணம்னு நியூஸ் ஸ்க்ரோலிங் போகுது. எல்லாருக்கும் ஷாக். அவர் முறைப்படி எனக்கு டைவர்ஸ் கொடுக்கலை. அப்புறம் எப்படி அவர் கல்யாணம் பண்ணிக்க முடியும்? விசாரிச்சுப் பார்த்தா, 2012-ம் வருஷம் ஜனவரி 7-ம் தேதி அவர் எங்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டதா சொல்றார். அதெப்படி? என்னை விசாரிக்கா-ம… இன்ஃபேக்ட் எனக்கு தெரியாம எனக்கு எப்படி விவாகரத்து கொடுக்க முடியும்?

டைவர்ஸுக்கு அப்ளை பண்ணினாலே 6-மாசம் ப்ரீத்திங் ஸ்பேஸ் கொடுத்து, கவுன்சலிங் வச்ச பிறகுதான் டைவர்ஸ் கொடுக்கணும்னு கோர்ட் நடைமுறை. ஆனா, இது எதுவுமே என் விஷயத்துல நடக்கல. மூணே மாசத்துல டைவர்ஸ் கொடுத்துட்டாங்க. இந்தியாவிலதானே இருக்கோம்? அதெப்படி இப்படி டைவர்ஸ் வாங்க முடியும்? அவருக்கு டைவர்ஸ் கிடைக்குதுன்னே வச்சிக்குவோம். அது ஏன் எனக்கு தெரிவிக்கபடக்கூட இல்லை? ஒரு பொண்ணா இதை என்னால ஜீரணிக்கவே முடியல. மனசு கஷ்டமா இருக்கு.

சொந்த வாழ்க்கையில இவ்வளவு சோகத்தை வச்சுகிட்டு, அதை வெளியே காட்டிக்கா-ம இருக்க முடியல. ஷூட்டிங் போனால் மனசு சரியாகும்னு படம் கமிட் பண்ணாக்கூட, ஒரு பிரேம்லயும் என்னால துக்கத்தை கட்டுப்படுத்தி நடிக்க முடியல. டப்பிங்ல கூட சோகத்தை வெளிக் காட்டாம பேசிடுவேன். ஆனா, மனசுல சோகம்னா, அது கண்ணுலதானே ரிஃப்ளெக்ட் ஆகும். அதனால தான் சினிமாவில் நடிக்க முடியாமப் போச்சு