சினிமா விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறனுக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளதாக இணையத்தில் நிறைய புகைப்படங்கள் வெளியானது. இது தொடர்பாக தற்போது ப்ளூ சட்டை மாறன் டிவிட் செய்துள்ளார்.

தமிழ் டாக்கீஸ் சேனலுக்காக யூ டியூபில் ப்ளூ சட்டை மாறன் சினிமா விமர்சனம் செய்து வருகிறார். இவர் செய்யும் சினிமா விமர்சனங்கள் எல்லாம் தமிழகம் முழுக்க பெரிய அளவில் பிரபலம்.

மிகவும் காமெடியாகவும், விறுவிறுப்பாகவும் இவர் விமர்சனம் செய்வார். அதிலும் சில படங்களை மிக மோசமாக இவர் கலாய்க்கவும் செய்துள்ளார்

சில அஜித் மற்றும் விஜய் படங்களை இவர் மோசமாக விமர்சனம் செய்துள்ளார். இவரின் சில வார்த்தைகள் ரசிகர்களை சீண்டிய சம்பவங்கள் கூட நடந்துள்ளது. இதனால் இணையத்தில் எல்லா வாரமும் வெள்ளிக் கிழமையானால் இவர் வைரலாவது வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில் இவருக்கு ரசிகர்கள் சிலர் சிலை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. வெண்கலத்தில் சிலை வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. இணையம் முழுக்க அந்த புகைப்படமும் வைரலானது.

ஆனால் இது ப்ளூ சட்டை மாறன் சிலை கிடையாது என்று சில மணி நேரங்களுக்கு பிறகு நிரூபணம் ஆனது. பாமக கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவரும், நிறைய தொண்டர்களை கொண்டவருமான மறைந்த காடுவெட்டி குருவின் சிலை அது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தான் தவறுதலாக யாரோ ப்ளூ சட்டை மாறன் சிலை என்று நினைத்து ஷேர் செய்து இருக்கிறார்கள். இதையடுத்து ப்ளூ சட்டை மாறன் பதறிப்போய் ”அடேய்” என்று அந்த டிவிட்டிற்கு பதில் அளித்தார். இந்த ப்ளூ சட்டை மாறனின் டிவிட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.