பிக் பாஸ் சேரன் மற்றவர்களை காயப்படுத்துவதில் ஸ்பெஷாலிட்டி என இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதால் ஊர் முழுவதும் அது பற்றி தான் பேச்சாக இருக்கிறது. சேரன், கவின், தர்ஷன், முகென், சாண்டி, லாஸ்லியா, கவின் என ஏழு பேர் மட்டுமே இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறார்கள்.

டைட்டில் ஜெயிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சினிமா பிரபலங்களிடம் பேட்டி காணும் போது பிக் பாஸ் பற்றிய கேள்வியை தவிர்க்க முடிவதே இல்லை.

அந்தவகையில் நடிகர் இயக்குனர் பார்த்திபன் தனது ஒத்த செருப்பு படம் குறித்து ஒரு இணைய ஊடகத்திற்கு சமீபத்தில் பேட்டியளித்தார்.

அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கருதப்படும் சேரன் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், சேரன் ஒரு சின்சியரான இயக்குனராக இருந்தாலும், மற்றவர்கள் காயப்படுவது குறித்து அவர் கவலைப்பட மாட்டார் என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சேரன் ஒரு சின்சியரான மனிதர். அவருடைய பாரதிகண்ணம்மா படம் சாதிகள் ஒழிப்பை பற்றி பேசியது. ஆனால் படம் ரொம்ப சீரியஸாக இருப்பதை உண்ர்ந்தேன்.

அதன்பிறகு தான் நானும் வடிவேலுவும் வேறு ஒரு படத்துக்காக வைத்திருந்த காமெடி டிராக்கை பயன்படுத்தி பாரதிகண்ணம்மாவை கொஞ்சம் கலகலப்பாக மாற்றினோம்.

ஆனால் அதற்கு சேரன் ஒப்புக்கொள்ளவே இல்லை. நான் கொடுத்த ஐடியா ஒர்க்கவுட் ஆகிவிட்டது என்றால், அவருக்கு பெயர் கிடைக்காது என சேரன் பயந்தார். இதனால் அவர் அந்த காமெடிக் காட்சிகளை வைக்க மறுத்துவிட்டார்.

நாங்கள் எல்லாம் பேசி அவரை சம்மதிக்க வைத்தோம். ஆனாலும் சேரன் நிறைய தகராறு செய்து, ஊர் முழுவதும் எனக்கு கெட்டப் பெயரை உண்டாக்கினார்.

என்னோட கதையில் பார்த்திபன் நுழைகிறார் என குற்றஞ்சாட்டினார். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் தனது கதையில் அவர் அந்த அளவுக்கு உறுதியாகவும், சின்சியராகவும் இருந்தார்.

ஆனால் அதே சேரன் தான் வெற்றிக்கொடி கட்டு படத்தின் போது என்னைக்கும் வடிவேலுவுக்கு காமெடி சீன்ஸ் செய்து, எப்படியாவது படத்தில் நுழைக்க வேண்டும் என ஒர்க் செய்தார். அந்த அளவுக்கு சேரன் தனது வேலையில் சின்சியராக இருப்பார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை, நான் கடந்த 10 மாதங்களாக ஒத்த செருப்பு படத்தில் பிஸியாக இருந்ததால் அந்நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க முடியவில்லை. எனவே நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.

என்னைப் பொறுத்த வரை சேரன் சமூக அக்கறை கொண்ட ஒரு இயக்குனர். அவரிடம் எனக்கே பிடிக்காத சில விஷயங்களும் இருக்கிறது.

ஏதோ ஒரு குப்பையான படத்தை பார்த்துவிட்டு, என்ன இது பார்த்திபன் படம் போல் இருக்கிறது என மேடையிலேயே பேசினார். மற்றவர்களை காயப்படுத்துவதை பற்றி அவர் கவலையே பட மாட்டார். அது அவரது ஸ்பெஷல் குணம்”, என பார்த்திபன் கூறினார்.