பேனர் விழுந்ததால் டூவீலரில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்த சம்பவம் நேற்றில் இருந்து தமிழக மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. இந்நிலையில், இது சம்பந்தமான சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகி மேலும் அதிர்ச்சி நிறைந்த கலக்கத்தை கூட்டி உள்ளது.

அந்த வீடியோவில்.. பரபரப்பாக உள்ளது சாலை. அதிமுக முன்னாள் கவுன்சிலரின் பேனர்கள் பறந்தபடி உள்ளன. அடிக்கு ஒரு தூரத்தில் பிரம்மாண்டமான கட்சி கொடி பறக்கின்றன. பேனர்கள் கட்டிடங்களின் உயரத்துக்கு காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன.

அப்போது, 23 வயது சுபஸ்ரீ, டூவீலரில் சென்று கொண்டிருக்கிறார். அவ்வளவு வேகம் இல்லை. மிதமான வேகத்தில்தான் வண்டியை ஓட்டுகிறார். சாலை விதிப்படி ஹெல்மட்டும் அணிந்து இருக்கிறார்.

ஆனால் விதிகளை மீறி வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களில் ஒன்று, சாலையில் செல்லும் சுபஸ்ரீ மீது திடீரென விழுகிறது. இதில் நிலைதடுமாறி கீழே டூவீலருடன் சுபஸ்ரீ விழுகிறார். அப்போதே மின்னல் வேகத்தில் தண்ணி லாரி வருகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் சுபஸ்ரீயின் இரண்டு கைகளிலும் ஏறி, அப்படியே அவரது தலையிலும் ஏறி இறங்கி.. அதன்பிறகுதான் நிற்கிறது.

டிரைவரால் உடனடியாக பிரேக் போட முடியவில்லை. இவையெல்லாம் இந்த சிசிடிவி காட்சியில் தெளிவாக தெரிகிறது. சாலைக்கு நடுவே வெள்ளை கலரில் அந்த பேனர் தொங்கி கொண்டிருக்கிறது. அந்த பேனர்கூட சரியாக கட்டப்படவில்லை என்று நேற்றே நேரில் பார்த்த பொதுமக்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர். அதன்படியே, அந்த பேனர் அவிழ்ந்து தொங்கி, சுபஸ்ரீ மீது விழுகிறது.

மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசாரை கேள்விகளால் ஐகோர்ட் துளைத்தெடுத்து வரும் நிலையில், இந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை தந்துள்ளது.

ஏனெனில் கோர்ட்டில் விசாரணை நடந்து வரும் இச்சமயத்தில், இந்த வீடியோ பலமான ஆதாரமாக எடுத்து கொள்ளப்படும் என்றே நம்பப்படுகிறது. சுபஸ்ரீ பலியான இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி அனைவரையும் கலங்கடித்து வருகிறது.