கனடாவுக்கு செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பிய சுபஸ்ரீ மீது லொறி ஏறியதில் அவர் உயிரிழந்த நிலையில் இந்த இறப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). பொறியியல் பட்டதாரியான இவர் வீட்டிற்கு ஒரே செல்லபிள்ளை ஆவார்.

சுபஸ்ரீ கனடா செல்வதற்கான தேர்வை எழுதிவிட்டு மகிழ்ச்சியுடன் இருசக்கர வாகனத்தில் நேற்று வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் ஒன்று திடீரென சரிந்து விழுந்திருக்கிறது.

சுபஸ்ரீ இதை எதிர்பார்க்காத சூழலில் நிலைதடுமாறி தவறி விழுந்த அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லொறி சுபஸ்ரீ மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தில், ஒரு பாவமும் அறியாத சுபஸ்ரீயின் உயிர் அநியாயமாக பறிபோனது.

இது தொடர்பாக லொறி ஓட்டுனர் மனோஜ் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினரும் மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளனர்

மேலும் பேனர்கள் அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.