கோலிவிட்டிலும் டோலிவுட்டிலும் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை மீண்டும் 13 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.
சென்னை: கோலிவிட்டிலும் டோலிவுட்டிலும் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகை மீண்டும் 13 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ளார்.

கோலிவுட் தற்போது நயன்தாராவை சூப்பர் ஸ்டாராக கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. நயன்தாராவும் வரிசையாக சோலோ படங்களில் நடித்து சில ஹிட், சில ஃபிளாப் என்று கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

ஆனால் நயன்தாராவிற்கு முன் தமிழ் சினிமாவில் தனியாக சோலோ படங்களில் நடித்து ஹிட் கொடுத்த ஒரு நடிகை இருக்கிறார்! லேடி விஜயகாந்த் என்று அழைக்கப்பட்ட அவருக்கு தமிழ் சினிமாவில் இப்போதும் தனி இடம் இருக்கிறது.

வைஜெயந்தி ஐ.பி.எஸ் இந்த பெயரை சொன்னால் எல்லோருக்கும் காக்கி உடையில் கம்பீரமாக நிற்கும் விஜயசாந்தி ஞாபகம்தான் வரும். ஒரு காலத்தில் கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர்தான் விஜயசாந்தி. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் கொடி கட்டி பறந்தார்.

தமிழில் விஜயகாந்த் படங்களுக்கு நிகராக விஜயசாந்தி தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்து இருந்தார். அட போலீஸ் கெட்டப் மட்டுமில்லாமல் டபுள் ஆக்சன், கிராமத்து ரோல் என்றும் சில படங்களில் கலக்கி இருக்கிறார். ஒரே ஆண்டில் 18 படங்கள் கூட இவர் நடித்துள்ளார்.

ஆனால் இவர் தற்போது சினிமா உலகில் இருந்து விலகிவிட்டார். ஆந்திர அரசியலில் கவனம் செலுத்த தொடங்கிய இவர் பல்வேறு கட்சிகளுக்கு மாறினார். முதலில் பாஜகவில் சேர்ந்த இவர் பின் அங்கிருந்து விலகி தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இணைந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இடையில் ஒரு வருடம் அரசியலில் ஓய்வு பெற்று அமைதியாக இருந்த விஜயசாந்தி கடந்த வருடம் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக செயல்பட தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பேச்சாளராக இவர் பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் இப்போது மீண்டும் விஜயசாந்தி சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இருந்து தன்னுடைய போணியை தொடங்க இருக்கிறார். ஆம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கும் சரிலேரு நீக்கவேரு படம் மூலம் மீண்டும் இவர் சினிமாவிற்கு வருகிறார்.

சுமார் 13 வருடங்களுக்கு பின் இவர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் தொடக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை அணில் ரவிபுடி இயக்குகிறார். ஆனால் இவர் அம்மா ரோலில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் கடைசியாக விஜயசாந்தி 2006ல் நாயுடம்மா படத்தில் நடித்தார்.

இன்னும் சில புதிய படங்களில் கமிட் ஆக விஜயசாந்தி திட்டமிட்டுள்ளார் என்று கூறுகிறார்கள். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் இவர் நடிக்க ஆர்வம் தெரிவித்துள்ளார்.. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா vs லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி கிராஸ்ஓவர் வந்தால் கலக்கலாகத்தான் இருக்கும்!