போதிய பணம் இல்லாததால் பிரபல இயக்குநரான ராஜசேகருக்கு கடைசி நேரத்தில் மருத்துவமனை சிகிச்சை தர மறுத்துவிட்ட அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.

தமிழில் பல படங்கள் இயக்கியவர் ராஜசேகர். ஆனால் அவர் இயக்குநராக அறியப்பட்டதை விட நடிகராகத் தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்ற அவரது பாடலுக்கு இப்போது வரை ரசிகர்கள் ஏராளம்.

வயதான பிறகு சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட அவர், டிவி சீரியல்களில் தனது கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி அவருக்கு மேலும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இந்நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜசேகர், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது.

அவருடைய மறைவு குறித்து இரண்டாவது மனைலி தாரா அளித்துள்ள பேட்டி ஒன்றில், “பணம் இல்லை என்பதால் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்க மறுத்துவிட்டார்கள். கடைசி நேரத்தில் சீரியல் இயக்குனர் விக்ரமாதித்யன் பணம் கட்டினார்.

இறப்பதற்குள் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது அவரது ஆசை. இப்போது தான் ஃபிளாட் வாங்கினோம். ஆனால், அதில் ஒருநாள் கூட வசிக்காமல் தனது ஆசை நிறைவேறாமலேயே அவர் இறந்து விட்டார்” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் தனது கடைசி காலத்தில் சிகிச்சைக்கு பணம் போதாமல் கஷ்டப்பட்டார் என்ற தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியும், சோகமும் அடைய வைத்துள்ளது.