விஜய் டிவி மீது மதுமிதா அளித்துள்ள புகாரில் கமலின் பெயரை குறிப்பிட்டது ஏன் எனும் கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: விஜய் டிவி மீது அளித்துள்ள புகாரில் கமலின் பெயரை குறிப்பிட்டு வீண் வம்பில் அவரை சிக்க வைத்துள்ளார் மதுமிதா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புகளில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியவர் மதுமிதா.

ஒரு டாஸ்க்கின் போது சக போட்டியாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதில், தன்னை தானே துன்புறுத்திக்கொண்டார் மது. இதனை காரணமாகக் கூறி அவரை உடனடியாக வெளியே அனுப்பினார் பிக் பாஸ்.

வெளியே வந்த மதுமிதாவுக்கு புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தார் கமல். இதைத்தொடர்ந்து அமைதி காத்துவந்த மதுமிதா மீது, விஜய் டிவி நிர்வாகம் சார்பில் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மதுமிதா தங்களை மிரட்டுவதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மதுமிதா, விஜய் டிவியை தான் மிரட்டவில்லை என்றும், தன் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார். மேலும் இந்த விவகாரத்தில் கமல் தலையிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் நேற்று இரவு விஜய் டிவி மீது நாசரத்பேட்டை காவல் நிலையத்தில் தபால் மூலம் புகார் அளித்துள்ளார் மதுமிதா. அதில் தன்னை சக போட்டியாளர்கள் கொடுமைப்படுத்தியதாகவும், அதை கமல் கண்டிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதுவரை விஜய் டிவிக்கும் மதுமிதாவுக்கும் இடையே நடந்து வந்த பிரச்சினையில், தற்போது கமலும் இழுக்கப்பட்டுள்ளார். போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் கமலோ அல்லது அவர் சார்பில் வழக்கறிஞரோ நிச்சயம் விளக்கம் அளித்தே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெரிவித்தே ஆக வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை வாரம் இருமுறை வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியை மட்டுமே கமல் செய்து வருகிறார். அப்போது, போட்டியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பதும், கண்டிப்பதும் மட்டுமே கமலின் பணியாக இருந்து வருகிறது. அதை தவிர தனது சொந்த கருத்துகளை கொஞ்சம் பேசி ஆடியன்சிடம் அப்ளாஸ் வாங்கிக்கொள்வார்.

மற்றபடி அனைவத்து விஷயங்களையும் முடிவு செய்வது பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே. அதற்கு மிகப்பெரிய உதாரணம் வனிதாவின் ரீஎண்ட்ரி. இந்த விஷயத்தில் பிக் பாஸ் ரூல் புக் பக்கம் கை நீட்டி நழுவிக்கொண்டார் கமல். இது மதுமிதாவுக்கு நிச்சயம் தெரியாமல் இருக்காது. மேலும் உச்ச நடிகரான கமலை பகைத்துக்கொண்டால் தன்னுடைய சினிமா வாழ்க்கை என்னவாகும் என்பதும் அவருக்கு நன்றாக தெரியும். அப்படி இருந்தும் கமலை ஏன் வாண்டடாக வம்புக்கு இழுத்திருக்கிறார் என்பதே புரியாத புதிராக உள்ளது.