இந்திய அணிக்காக பல கோப்பைகளை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்த விவாதம் பல நாட்களாகவே நடந்து வருகிறது. தோனி இந்திய அணியின் எதிர்கால இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து ஓய்வு பெற வேண்டும் என்ற குரல் நீண்ட நாட்களாகவே எழுந்த வண்ணம் உள்ளது. இருப்பினும், தோனி இதுவரை அவரது ஓய்வு குறித்த எவ்வித கருத்தையும் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், தாதா என்று அழைக்கப்படும் இந்திய அணியின் முன்னாள் சிறந்த கேப்டனான சவுரவ் கங்குலி, தோனியின் ஓய்வு குறித்து இந்தியா டுடேவிற்கு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் கங்குலி, “ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தன்னுடைய சகாப்தத்தை ஒரு சமயத்தில் முடித்தே ஆக வேண்டும்” என்றும், “சச்சின், லாரா, பிராட்மேன் என ஒவ்வொருவரும் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டியிருந்தது. அதைப்போன்ற தருணமே, தற்போது தோனிக்கு வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.மேலும், தோனி தற்போது தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை மதிப்பிட வேண்டும் எனவும், இப்போது தோனி ஓய்வு பெற்ரால் மிகச்சரியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தோனியே அவரது முடிவை எடுக்க வேண்டும் என்றும், அவரிடம் எவ்வளவு ஆற்றல் உள்ளது என்பதை தோனியே அறிந்து, விரைவில் அவர் இன்னும் எவ்வளவு நாள் விளையாடுவார் என்ற தகவலை பிசிசிஐ கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கங்குலி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தோனி அறிமுகமான 2004 ம் ஆண்டு முதல் போட்டியில் கங்குலி அவர்களே இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அதைப்போல, கங்குலி அவரது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது, தோனி கங்குலிக்கு கேப்டன் பொறுப்பை வழங்கி அழகு பார்த்தார். அவ்வளவிற்கு இருவருக்கும் இடையில் நட்பு நிலவுகிறது. ஆனால், உலககோப்பை போட்டியில் தோனியின் ஆட்டம் கங்குலிக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த காரணங்களால், தோனி ஓய்வு காலத்தை விரைவில் அறிவிப்பது இந்தியாவுக்கு நல்லது என்று கங்குலி கூறியுள்ளார்.