சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் நடிகை ஊர்வசியும் இணைந்து நடிக்கப்பபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊர்வசியின் நடிப்பு தனி ரகம் நடிப்போடு காமெடியும் இழையோடும். மைக்கேல் மதன காம ராஜன், மகளிர் மட்டும் என பல படங்களை உதாரணமாக சொல்லலாம். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை ஊர்வசி இயக்குநர் சுதா கொங்கராவின் சூரரைப் போற்று என்ற படத்தில் நடிக்கிறார்.

ஒரு படத்தை கொடுத்தாலும் அது தரமான படமாகவும், ரசிகர்களுக்கு விருந்தளிப்பதாகவும் இருக்க வேண்டும். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படமும் அந்த ரகம் தான்.

நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடனும், இந்திய விளையாட்டுத் துறையில் உள்ள அரசியல் முறைகேடுகளையும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலும் எடுக்கப்பட்ட படம்.இந்தப்படத்தில் நடிகர் மாதவனும், கிக் பாக்ஸ் வீராங்கனையான ரித்திகா சிங்கும் நடித்திருந்தனர். ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதோடு சிறந்த படத்திற்கான விருதினையும் பெற்றது. இந்தப் படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. இவர் தற்போது அதே போன்றதொரு தரமான படத்தை கொடுக்க முன்வந்துள்ளார்.

சூர்யாவின் 2D என்டேர்டெய்ன்மெண்ட் உடன் சீக்கியா என்டர்டெய்ன்மென்ட்டின் குணீத் மோங்கா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. நடிகர் சூர்யாவை வைத்து இப்படத்தினை இயக்குகிறார் சுதா கொங்கரா. இது ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத் அவர்களின் வாழ்கை வரலாறு மற்றும் நிகழ்வினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.

இதில் ஜாக்கி ஷெராஃப், அபர்ணா முரளி, கருணாஸ், மோகன் பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு 20 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று தற்போது முடிவடையவுள்ளது.

மேலும், இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் படத்தின் படப்பிடிப்பில் இணையவிருக்கிறார் நடிகை ஊர்வசி. ஊர்வசி இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிப்பதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். ஊர்வசி படத்தில் இருந்தால் அந்தப் படத்தில் காமெடிக்கும் கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பது மட்டும் உறுதி.

சூர்யாவின் 2D என்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பானுப்ரியா நடிப்பில் வெளியான மகளிர் மட்டும் படத்திலும் ஊர்வசி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு போட்டியாக தனுஷின் பட்டாஸ் படமும் சிவகார்த்திகேயனின் ஹீரோ படமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகவுள்ளது.