பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் சினிமாவில் எத்தனையோ காமெடி செய்தாலும், சொந்த வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். தனக்காக வாதாடும் வக்கீலை மிரட்டிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள பவர்ஸ்டார் சீனிவாசன் தற்போது மணப்பாறை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார்.

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமாக பல கேஸ் ஃபைலை கையில் கொண்டு பல ஊர் காவல் நிலையங்களுக்கும் கோர்ட்டுக்கும் அழைத்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் பெற்ற நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மணப்பாறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட்டார்.
மணப்பாறை அடுத்த வேங்கைக்குறிச்சி கிராமம், பொம்மம்பட்டியை சேர்ந்தவர் பாலகுரு மகன் பி.பாண்டி. இவர் மணப்பாறை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்காக, துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், காசோலை மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தார்.

ஆனால், இரண்டு ஆண்டுகளாக வழக்கு செலவுத்தொகை எதுவுமே கொடுக்கவில்லை என்றும், இது தொடர்பாக சீனிவாசனிடம் மொபைல் ஃபோனில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மணப்பாறை காவல்நிலையத்தில் வழக்கறிஞர் பாண்டி கடந்த மே மாதம் புகார் அளித்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நீதிமன்ற உத்தரவின் பேரில் திங்கள்கிழமை மாலை மணப்பாறை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மேலும் இரண்டு நாள் கையெழுத்திடவும் உத்தரவு இருப்பதாகத் தெரிகிறது.

பவர் ஸ்டார் வாழ்க்கையில் அடிக்கடி பவர் ஃப்ளக்சுவேசன் (Fluctuation) ஆவது அவரையும் அவர் குடும்பத்தையும் பெருதும் பாதிக்கிறது .இதை எல்லாம் கடந்து பவர் ஸ்டார் மனைவி, மிக ஆறுதலாக அவருடன் இருந்து ஆறுதல் கொடுத்து வருகிறார். மனைவி சொல்லே மந்திரம் என்று பவர் இப்போது இருக்கிறார்.

பவர் ஸ்டார் எடுத்த எத்தனையோ சினிமா முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன. அது போல சொந்த வாழ்க்கை பிரச்சனைகளும் முடிவுக்கு வரும் என்று நம்புவோம்.