மக்கள் மனதில் நினைப்பதை கூறாமல் பிக்பாஸ் பேச்சைக்கேட்டு ஓடி ஒளியும் கமல் :செம்ம காண்டில் இருக்கும் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடரும் சர்சைகள் குறித்து கமல்ஹாசன் இதுவரை வாயை திறக்காமல் இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் உள்ள பெண்கள் அரைகுறை ஆடையில் சுற்றி வருவதாக அந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்புகள் எழுந்தன.

தமிழ் கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன. இதனிடையே பிக்பாஸ் வீட்டில் உள்ள விஜய் டிவி பிரபலமான கவின் தனது சுயநலத்துக்காக ஒரே நேரத்தில் நான்கு பெண்களை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றியதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

கவினை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அதனை விஜய் டிவியும் கண்டுகொள்ளவில்லை. நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசனும் கண்டிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து கல்லூரி நாட்களில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் சென்றதாக கூறினார் நடிகர் சரவணன். இந்த விவகாரமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சரவணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்.

ஆனாலும் ஒரு வாரம் கழித்து அதையே காரணமாய் காட்டி சரவணனை நிகழ்ச்சியிலிருந்து அதிரடியாய் வெளியேற்றியது நிகழ்ச்சிக் குழு. சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் சனிக்கிழமை தெரியப்படுத்தப்படும் என்றனர். ஆனால் இரண்டு சனிக்கிழமைகள் கடந்து விட்டன. இதுவரை அதைப்பற்றியும் கமல்ஹாசன் வாய்திறக்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுமிதா, சக ஹவுஸ்மேட்ஸ்களின் டார்ச்சரால் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

வருணபகவான் குறித்து மதுமிதா பேசியது, காவிரி பிரச்சனையாக மாறி சக குடும்பத்தினருடன் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மதுமிதாவை இழிவாக பேசிய ஷெரின், கவின் உள்ளிட்டோர் தமிழ் தமிழ் என்று பேசி நடிக்கிறாய். உண்மையெனில், தமிழ்நாட்டுக்காக உயிரை கொடு என்று கூறியுள்ளனர்.

இதனால் மதுமிதா தனது உண்மைத்தன்மையை நிரூபிக்க கத்தியால் கையை வெட்டிக்கொண்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து சிகிச்சைக்குப் பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் மதுமிதா.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் வியாழக்கிழமை இரவு என்ன நடந்தது என்பது ஒளிபரப்பப்படவில்லை. பிக்பாஸ் போட்டியாளர்களும் அதுகுறித்து பேசவில்லை. மதுமிதாவையும் அதுகுறித்து கமலுடன் மேடையில் பேசக்கூடாது என கூறியிருப்பார்கள் போல அவரும் தெளிவாக எதுவும் சொல்லவில்லை.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் குறித்தெல்லாம் பொறுப்பாக கேட்கும் கமல்ஹாசனும் மக்களுக்கு அதை தெரியப்படுத்த விரும்பவில்லை. பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது? மதுமிதாவை தற்கொலை முயற்சிக்கு தூண்டியவர்கள் யார்? என எது குறித்தும் கமல் விவாதிக்கவில்லை.

60க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ளன. யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று கூறிதான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் முக்கியப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்காமல், என்ன நடந்தது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தாமல் கமல்ஹாசன் ஓடி ஒளிவதாக நெட்டிசன்கள் கருத்து கூறியுள்ளனர்.