அங்காடித்தெரு மகேஷ் எடுக்கும் புதிய முயற்சி இதாவது கைகொடுக்குமா சினிமாவில் பல நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்திருக்கின்றனர். ரஜினி, சத்யராஜ், சரத்குமார், விக்ரம் என பலரும் பெண் வேடம் போட்டிருக்கின்றனர். அந்த வரிசையில் தேனாம்பேட்டை மகேஷ் படத்தில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறாராம் அங்காடித்தெரு மகேஷ்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் தேனாம்பேம்டை மகேஷ் என்ற படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை காலை பூஜையுடன் ஆரம்பமானது. இதில் இயக்குநர் பாக்யராஜ் உள்ளிட்ட முக்கிய சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த அங்காடித்தெரு படத்தில் நடித்த நடிகை அஞ்சலிக்கு அடுத்தடுத்து தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துவிட்டார்.
அங்காடித்தெரு என்னும் பிரமாண்டமான வெற்றிப்படத்தில் நடித்த பிறகு அந்தப் படத்தில் நடித்த நடிகர் மகேஷுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக எந்த ஒரு படமும் வாய்க்கவில்லை. இடையில் நடித்த சில படங்களும் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிவிட்டன.

நீண்ட நாட்களாக படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த அங்காடித்தெரு மகேஷ் தற்போது தேனாம்பேட்டை மகேஷ் என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிச்சுவாகத்தி படத்தில் நடித்த நடிகை அனிஷா நடிக்கிறார்.

இவர்களுடன் அம்பானி சங்கர், மகாநதி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கமலா தியேட்டர் உரிமையாளர் சி.டி.கணேசன், குட்டிப்புலி ராஜசிம்மன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கிராண்ட் சர்வீஸ் மேக்கர்ஸ் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவது எம்.சித்திக்.

ஒளிப்பதிவு முனீஷ், இசையமைப்பது ஸ்ரீசாய் தேவ், படத்தொகுப்பு பாசில், கலை-கார்த்திக், நடனம்-தீனா, பாடல்களை எழுதியது சிவசங்கர், சண்டைப் பயிற்சி-எஸ்.ஆர்.முருகன் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

இந்தப் படத்தில், மகேஷ் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபராகவும், பெண் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். படம் பற்றி இயக்குநர் சித்திக் குறிப்பிடும்போது, எதெற்கெடுத்தாலும் பயப்படுவது, பலரிடம் அடிவாங்குவது என்று இருக்கும் மகேஷை அவர் தந்தை ஓயாமல் திட்டிக்கொண்டே இருக்கிறார்.

ஆனால், பிற்பாதியில் மகேஷ் யார் என்று இவரது தந்தைக்கு தெரியவருகிறது. அதன் பின்னர் மகேஷின் வாழ்க்கை எப்படி போகிறது என்பதை திரைக்கதையாக உருவாக்கியுள்ளேன், என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஞாயிற்றுகிழமை காலை தொடங்கியது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், நடிகர்கள் ரோபா சங்கர், கவிஞர் சினேகன், ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம், ஜான் விஜய் உள்ளிட்ட முக்கிய சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.