தன்னை வளர்த்து விட்ட தயாரிப்பாளர் கலைஞானத்திற்கு ரஜினி செய்த நன்றி கடன் என்ன தெரியுமா இயக்குநர் பாரதிராஜா தலைமையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் பேசிய ரஜினிகாந்த், கலைஞானத்திற்கு தன்னுடைய சொந்த செலவிலேயே வீடு வாங்கித் தருவதாகவும், அவர் வாழ்நாள் முழுவதும் அங்குதான் வசிப்பார் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சி வருபவர் கதாசிரியர் கலைஞானம். தன்னுடைய 19ஆவது வயதிலிருந்தே தியேட்டரில் முறுக்கு விற்பது முதல் படங்களுக்கு போஸ்டர் ஒட்டுவது வரை அனைத்து வேலைகளையும் செய்து படிப்படியாக சினிமா கதாசிரியராக உயர்ந்தவர்.

சினிமாவில் நுழைந்த ஆரம்பகாலத்தில் வில்லனாக நடித்துவந்த ரஜினிகாந்த்தை முதன்முதலில் தன்னுடைய பைரவி படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்ததும் கதாசிரியர் கலைஞானம் தான். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் தான் ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை கலைப்புலி தாணு வழங்கினார்.
90 வயதான கலைஞானம் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவந்தாலும், இன்னும் வாடகை வீட்டிலேயே குடியிருந்து வருகிறார். இதுவரையில், தனக்காக யாரிடமும் சென்று உதவி கேட்டதில்லை. தமிழ் சினிமாவுக்கு இவர் அளித்துவரும் சேவையைப் பாராட்டி இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையில் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், பாக்கியராஜ், சிவகுமார், பி,வாசு, ஆர்.பார்திபன், குகநாதன், நடிகர் ராஜேஷ், கங்கை அமரன், கே.ஆர், தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜய பாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா நாயகனான கலைஞானத்தை இயக்குநர் பாரதிராஜாவும், ரஜினிகாந்த்தும் விழா மேடைக்கு அழைந்து வந்தனர். விழாவில் முதலில் பேசிய தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜும் விஜய பாஸ்கரும், கலைஞானத்திற்கு அரசு சார்பில் கண்டிப்பாக வீடு கட்டி கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

அடுத்து பேசிய ரஜினிகாந்த், நான் என்றைக்கும் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டதில்லை. பைக், வீடு இது மட்டுமே போதும் என்று நினைத்து மிக சந்தோசமாக இருந்தேன். வில்லனாக நடித்துகொண்டிருக்கும்போதே, திடீரென பைரவி படத்தில் ஹீரோவாக நடிக்க கலைஞானம் சார் அழைத்ததால் அதிர்ச்சி அடைந்தேன். அந்தப் படத்தில் தான் முதன்முதலில் எனக்கு சூப்பர்ஸ்டார் பட்டமும் கொடுக்கப்பட்டது. அந்தப் படத்திற்கு பின்பு நானும் கலைஞானமும் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் எனக்குள் இருக்கிறது என்றார்.

கலைஞானம் வாடகை வீட்டில் இருக்கிறார் என்ற விஷயமே எனக்கு இப்பொழுது தான் தெரியவந்தது. இது எனக்கு அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் உள்ளது. தமிழக அரசு வீடு கட்டித்தரத் தேவையில்லை. நான் இருக்கும்போது அரசாங்கம் எதுக்கு, தேவையில்லை. நானே என்னுடைய சொந்த செலவில் வீடு வாங்கித் தருவேன். அந்த வீட்டில் தான் அவர் வாழ்நாள் முழுவதும் இருக்கவேண்டும். இருப்பார் என்று பேசினார். இறுதியில் கலைஞானத்திற்கு ரஜினிகாந்த் தங்கச்சங்கிலி அணிவித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டார்.