பிக்பாஸ் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது, அதிலும் கடந்த இரண்டு சீசன்களை விடவும் மூன்றாவது சீசன் களைகட்டுகிறது என்றே சொல்லலாம்.

முதல் நாளிலேயே ஆர்மி, காதல் விளையாட்டு என இப்படியே பட்டியல் நீள்கிறது, இதுமட்டுமா ஒருசில சம்பவங்களால் ”சுற்றிலும் கமெரா இருக்கிறது, இது ஒரு விளையாட்டு” என்பதில் பங்கேற்பாளர்கள் கவனமாக இருக்கிறார்களோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

ஒவ்வொரு நாளும் பங்கேற்பாளர்களின் நடவடிக்கைகளையும், சுபாவங்களையும் கண்காணித்து வரும் நெட்டிசன்கள் மீம்களையும் தெறிக்கவிட தவறவில்லை.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முதலில் லொஸ்லியாவுக்கு நல்ல பெயர் இருந்தாலும், தற்போதைய நிலையோ மோசம் தான்.

இப்படி நாளுக்கு நாள் களேபரங்கள் அரங்கேற, சில நாட்களுக்கு முன் சரவணன் வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

இதற்கு காரணம், சேரன், மீரா பிரச்சினையில் கமல் பேசிக்கொண்டிருக்கையில், நானும் கல்லூரி பருவத்தில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் சென்றேன் என்று வெளிப்படையாக தான் அன்று செய்த தவறினைக் கூறினார் சரவணன்.

இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியதால், மறுநாளே பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். தான் அவ்வாறு செய்தது தவறு என்றும், என்னைப் போன்று தற்போதுள்ள இளைஞர்கள் இருக்க வேண்டாம் என்றும் தனது தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி என்ற கர்வத்துடன் அத்தருணத்தில் அவ்வாறு நடந்து கொண்டேன், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதன் பின்பு ஒரு வாரம் கழிந்த நிலையில் பிக்பாஸ் சரவணன் செய்த தவறு, கல்லூரி பருவத்தில் நடந்திருந்தாலும் அதனை தற்போதும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதனால் சரவணன் வெளியேற்றப்படுகிறார் என்று என்று கூறி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விடயத்தில் சரவணனுக்கு எதிர்ப்பு குரல்கள் இருந்தாலும், ஆதரவாகவும் பலரும் பேசி வருகின்றனர்.

காரணம் முதல் இரண்டு சீசன்களில் நடந்த விடயங்கள் தான், ஆரவ்- ஓவியா காதல், மஹத்- யாஷிகா காதலை பிக்பாஸ் ரசிகர்கள் யாரும் எளிதில் மறக்கமாட்டார்கள்.

ஓவியாவுக்கு முத்தம் அளித்ததை ஆரவ்வும், யாஷிகாவை காதலிப்பதாக மஹத்தும் ஒத்துக் கொண்டனர்.

அதிலும் யாஷிகா- மஹத் காட்சிகள் முகம் சுழிப்பவையாகவே இருந்தது, ஒரே படுக்கையில் படுப்பது, நெருங்கி பழகியது என இவர்கள் செய்தது ரொம்பவே ஓவர் தான், இரவு நேரங்களில் இதைவிட மோசம் என பிக்பாஸில் கலந்து கொண்டவர்களே சில பேட்டிகளில் கூற கேள்விப்பட்டிருப்போம்.

பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என சரவணனை தண்டித்த பிக்பாஸ், ஏன் இவர்களை தண்டிக்கவில்லை? ஏன் கண்டிக்கக்கூட இல்லையே? என்பதே நெட்டிசன்களின் வாதமாக இருக்கிறது.

காதல், நட்பு என்பது அவரவர்கள் தனிப்பட்ட விடயம் என்றாலும் கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படியா நடந்து கொள்வார்கள்? TRP க்காக தொலைக்காட்சி எதையும் கண்டும் காணாமல் இருந்ததா?

அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு சரவணன் விஷயத்தில் மட்டும் நடவடிக்கை எடுத்தது ஏன்?

இதுமட்டுமா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண் போட்டியாளர்களின் ஆடைகள் முதற்கொண்டு இது ஒரு கலாச்சார சீர்கேடு என பலரும் இப்போதே விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

கடைகோடி கிராமம் முதல் உலகெங்கும் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியை, வெறும் கோடிகள் புரளும் வணிகமாக பார்க்காமல் நல் கருத்துகளை பரப்பும் நிகழ்ச்சியாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாகவும் இருக்கிறது!!!