மும்பை: விஜய் சேதுபதி மாதவன் நடிப்பில் உருவான விக்ரம் வேதா படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய்சேதுபதியாக அமீர் கானும் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வேதாளம் கேள்வி கேட்க விக்ரமாதித்தன் பதில் சொல்ல அவனிடமிருந்து மீண்டும் வேதாளம் தப்பிச்செல்லும். இந்த பாணியில் ஒரு படம் ஆக்சன் திரில்லராக எடுத்தால் எப்படியிருக்கும் என்று புஷ்கர் – காயத்ரி யோசித்ததன் விளைவாக உதயமான படம்தான் விக்ரம் வேதா.

2017ஆம் ஆண்டில் மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விக்ரம் வேதா அந்த வருடத்தில் ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம் வேதா. இப்படம் நியோ நாயர் ஆக்‌ஷன் திரில்லர் ஜானரில் வெளியானது.

புஷ்கர் – காயத்ரி ஜோடி இயக்கியிருந்த இப்படத்தை சசிகாந்த் தயாரிப்பில் 11 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப் பட்டது. இப்படம், தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

‘விக்ரம் வேதா’ விஜய் சேதுபதி வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது . இப்படத்தில் கேங்ஸ்டராக கலக்கியிருப்பார் விஜய் சேதுபத. நல்ல நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் மாதவனும் இப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்தார். இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் நல்ல தீனியாக அமைந்தது இந்தப்படம்.

விக்ரம் வேதா படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக இருக்கிறது. விக்ரமாக சயீப் அலிகானும், வேதாவாக அமீர் கானும் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமீர்கான் தமிழ்த் திரைப்படமான கஜினியை ரீமேக் செய்து நடித்தார். இப்போது மீண்டும் வெற்றிபெற்றதமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார். முதலில் வேதாவாக ஷாருக்கான்தான் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

அமீர்கான், சயீப் அலிகான் இருவரும் இப்போது பட சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் விக்ரம் வேதா பட சூட்டிங்கை தொடங்கி டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அமீர்கான் படங்களுக்கு உலகமெங்கும் வரவேற்பு உள்ளது. அவர் கேங்ஸ்ட்ராக நடிக்கிறார். இதில் சயீப் அலிகான் போலீஸ் அதிகாரியாக நடிப்பது கூடுதல் சிறப்பம்சம். இந்த படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியே இதனை இந்தியிலும் இயக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பாலிவுட் வட்டார பட்சிகள் கூறுகின்றன.