சென்னை: சீயான் விக்ரமின் தம்பி நடிகராகியுள்ளார்.

விக்ரம் தன் தந்தை வழியில் நடிகர் ஆனார். பல ஆண்டு போராட்டங்களுக்கு பிறகு முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்தை பெற்றார். அவர் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் அந்த போராட்ட காலத்திலேயே மனமுடைந்து சினிமாவே வேண்டாம் என்று சென்றிருப்பார்கள்.

விக்ரம் தன் மன உறுதியால் வெற்றி பெற்றார். தன் மகனையும் ஹீரோவாக்கிவிட்டார். கிரிசாயா இயக்கத்தில் த்ருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் விக்ரமின் தம்பி அரவிந்த் ஜான் விக்டரும் நடிகராகியுள்ளார். ஏ. இருதயராஜ் இயக்கியுள்ள எப்போ கல்யாணம் படம் மூலம் அரவிந்த் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். அந்த படத்தின் வில்லனே அரவிந்த் தான்.

ஒரு ஹீரோ வீட்டில் இருந்து வில்லன் வந்துள்ளதும் சுவாரஸ்யமான விஷயமே. 4 ஹீரோயின்கள் கொண்ட எப்போ கல்யாணம் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் நடந்துள்ளது.

விக்ரமையே வில்லனாக நடிக்க வைத்தால் மிரட்டிவிடுவார். இந்நிலையில் அவரின் தம்பி எப்படி வில்லத்தனம் செய்கிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது. விக்ரம் போன்று இல்லாமல் அரவிந்தின் திரையுலக பயணம் பிரச்சனையின்றி செல்லட்டும்.

முன்னதாக த்ருவை ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்க அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்தார் விக்ரம். தனது கெரியரை உச்சத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர் பாலாவை வைத்து வர்மா என்ற பெயரில் அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்ய வைத்தார்.

பாலா இயக்கியது தயாரிப்பாளர்களுக்கு பிடிக்காமல் போக அந்த படத்தை மறுபடியும் எடுத்துள்ளனர். வர்மா கைவிடப்பட்டபோது த்ருவுக்கு முதல் படமே பிரச்சனையா என்று பேச்சு கிளம்பியது. ஆதித்ய வர்மா படப்பிடிப்பின்போது மகனுடனேயே இருந்து தைரியம் அளித்து நடிக்க வைத்துள்ளார் விக்ரம்.

ஆதித்ய வர்மா படத்திற்கு த்ருவ் போன்று விக்ரமின் பங்களிப்பும் அதிகம் என்று கூறலாம்.