சென்னை: விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள பிகில் படத்தில் அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக வெளியான தகவல் குறித்து படத்தின் வசனகர்த்தா ரமணகிரிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் பிகில். இந்தப் படம் நடிகர் விஜய்க்கு 63வது படமாகும்.

இந்த படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். பிகில் படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.பிகில் படம் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிறது. இந்நிலையில் படத்தில் அரசியல் வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானது. காரணம் பிகில் படத்தின் வசனகர்த்தா ரமணகிரிவாசன்.

ஏற்கனவே விஜய்- அட்லி கூட்டணியில் வெளியான தெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு வசனம் எழுதியவர் ரமணகிரிவாசன்தான். மெர்சல் படத்தில் இடம்பெற்ற இவரது வசனங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில் பிகில் படத்திலும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. இதனால் படத்தில் அரசியல் தாக்கம் இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதுகுறித்து பேசியுள்ள படத்தின் வசனகர்த்தாவான ரமணகிரிவாசன், பிகில் அரசியல் சம்பந்தப்பட்ட படம் அல்ல என தெரிவித்துள்ளார்.

பிகில் படம் விளையாட்டு சம்பந்தப்பட்டது. ஆனால் வெறும் விளையாட்டு மட்டுமே கிடையாது. பிகில் படத்தில் மெர்சலை காட்டிலும் காமெடி அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.