மறைமுகமாக ஸ்டாலின் மகனை தாக்கிய பாக்யராஜ் சென்னை: இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் அரசியல், சினிமா பற்றி தெரிவித்துள்ள கருத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கடந்த வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. உதயநிதியின் தந்தை மு.க. ஸ்டாலின் 32 ஆண்டுகளாக வகித்த அதிகாரமிக்க பதவி அவருக்கு கிடைத்துள்ளது.

இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து உன்னதமான செயல்பாடுகளின் மூலமாக கழக வெற்றிகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்காகவும் பாடுபட உறுதி ஏற்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விக்ரம் பிரபு நடித்துள்ள அசுரகுரு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாக்யராஜ் பேசியது உதயநிதி ஸ்டாலினை குத்திக் காட்டுவது போன்று உள்ளது என்று விமர்சனம் எழுந்துள்ளது.

நிகழ்ச்சியில் பாக்யராஜ் கூறியதாவது,

விக்ரம் பிரவுவின் உழைப்புக்கு அவர் தொட வேண்டிய உயரம் இன்னும் நிறைய இருக்கிறதே என்பதே என் ஃபீலிங். சினிமாவில் தான் வாரிசுகளுக்கு எல்லாம் இடையூறாக உள்ளது. வெற்றி தள்ளிப் போய், தடங்கலாகி வருகிறது. ஆனால் அரசியலில் அப்படி இல்லை, ஓவர் நைட்டில் வந்துவிடுகிறார்கள்.

நான் யாரையும் குறிப்பிட்டு எல்லாம் சொல்லவில்லை. இதை நீங்க பெருசு பண்ணிவிடாதீங்க. அவரை பிடிக்கவில்லை, அவர் வந்தாரு, அதனால் அவரை பற்றி நான் சொல்லிட்டேன் என்று பெரிது படுத்த வேண்டாம். எப்படியோ உங்களுக்கு ஒரு டாப்பிக் கிடைத்துவிட்டது. பாக்யராஜ் கடுமையான தாக்கு என்று சொல்லிவிடுவார்கள்.

நிஜத்தில் பார்க்கும்போது என் பைனும் சரி, பாண்டியராஜன் பையனும் சரி செட்டில் ஆகிக் கொண்டிருக்கிறான். அரசியலில் மட்டும் வாரிசுகளுக்கு உடனே ஓகே ஆகிவிடுகிறது. சினிமாவில் மட்டும் ஒன்றும் நடப்பது இல்லை. அப்பாக்கள் நினைத்தால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. அது அமையணும். அதற்கான டைம் வரும் போது தான் அமையும்.

பாக்யராஜ் மேடையில் சிரித்துக் கொண்டே அரசியல் வாரிசு பற்றி பேசியதால் அவர் உதயநிதி ஸ்டாலினைத் தான் கிண்டல் செய்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள். சிலரோ பாக்யராஜ் உண்மையை தான் சொல்லியுள்ளார் என்கிறார்கள். மேலும் சிலரோ பாக்யராஜ் பேசியது தவறு என்கிறார்கள்.