வடிவேலுவுக்கு நல்லா உரைக்கற மாதிரி புத்திமதி சொன்ன வெங்கட் பிரபு சென்னை: இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை தரக்குறைவாக பேசிய வடிவேலுவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேசமணி கதாபாத்திரம் உலக அளவில் டிரெண்டான பிறகு பேட்டி அளித்த வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை பற்றி தரக்குறைவாக பேசினார். பிரமாண்ட மற்றும் வெற்றி இயக்குநர் ஷங்கரை போய் ஒரு கிராபிக்ஸ் இயக்குநர் என்று கூறி மட்டம் தட்டினார் வடிவேலு.

அவரின் அகந்தை பேச்சுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து வெங்கட் பிரபுவும் கண்டனம் தெரிவித்துள்ளார். வடிவேலு விவகாரம் பற்றி வெங்கட் பிரபு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வடிவேலு
வெங்கட் பிரபு
எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன்!! ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், ‘டைரக்டர் சொதப்பிட்டான்பா’ இது தான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது!! ஒரு ஆகச் சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப் பெரிய வெற்றியைத் தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை தரக்குறைவாகப் பேசியது என்னை மனமுடையச் செய்தது என்கிறார் வெங்கட் பிரபு.

சிம்புத்தேவன்
ஷங்கர்

இயக்குநர் சிம்புத்தேவனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவர் அருமையான படைப்பாளி மட்டுமில்லை மிகச் சிறந்த மனிதர்! ஷங்கர் அவர்களைப் பற்றி யாரும் சொல்ல அவசியமே இல்லை. அவர் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர். எல்லோருமே இங்கு மக்களை மகிழ்விக்கத் தான் இருக்கின்றோம். இதில் வன்மம் வேண்டாமே.. அன்பை மட்டும் வளர்ப்போம் கிரியேட்டர்களை மறக்க வேண்டாம் என்று வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

நேசமணி
விஜய் மில்டன்
முன்னதாக ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டனும் வடிவேலு செய்தது தவறு என்று ட்வீட் செய்திருந்தார். அவர் தனது ட்வீட்டில்,
“தலையில் சுத்தியல் விழுந்தால் சில வருடம் கழித்து கூட சித்தம் கலங்கும் போல! உங்கள் மீது மிகுந்த நேசம் வைத்திருக்கிறோம் அய்யா நேசமணி அவர்களே.. ஏணிகளை எட்டி மிதித்து அதை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.’ என்று தெரிவித்திருந்தார்

ரசிகர்கள்
கோரிக்கை
வடிவேலுவின் பேச்சு திரையுலக பிரபலங்களுக்கு மட்டும் அல்ல அவரின் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. அய்யா நேசமணி, தயவு செய்து தலைக்கனத்தில் ஆடாதீர்கள், காணாமல் போய்விடுவீர்கள். உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம், கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.