டிக்டாக்கிற்கு அடிமையாகி தனது உயிரை விட்ட விபரீதம்..விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதை டிக்டாக்கில் வெளியிட்ட பெண் அதிர்ச்சி மரணம் அடைந்தார்.

டிக் டாக் ஆப்பிற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். அதில் கிடைக்கும் லைக் மற்றும் பாராட்டுக்காக பெரும்பாலான நேரங்களை அதிலேயே செலவிட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், பல குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் கூட டிக் டாக் ஆப்பிற்கு தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், இந்த டிக் டாக் பழக்கம் இரு குழந்தைகளின் தாயின் உயிரை பறித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் சீராநத்தம் கிராமத்தை சேர்ந்த பழனி வேலு என்பவரின் மனைவி அனிதா(24). இந்த தம்பதிக்கு மோனிஷா என்கிற மகளும், அனீஷ் என்கிற மகனும் உள்ளனர். பழனிவேல் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.

அனிதா டிக்டாக் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் குழந்தைகளை கூட கவனிக்காமல் அதிலேயே மூழ்கினார். டிக் டாக்கில் டப்மாஷ் செய்வது, நடனமாடுவது, பாடல் பாடுவது என தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு அதில் கிடைக்கும் லைக்கில் மயங்கி வந்தார்.

இவரது செயல்பாடுகள் குறித்து பழனிவேலுக்கு அவரின் உறவினர்கள் தகவல் கொடுத்தனர். எனவே, அனிதாவை அவர் கடுமையாக திட்டியுள்ளார்.

ஆனாலும், அனிதா தனது செயலை நிறுத்தவில்லை. சமீபத்தில் அவரின் மகன் கீழே விழுந்து காயம் அடைந்தான். அவனை மருத்துவமனைக்கும் அனிதா கூட்டிச்செல்லவில்லை. எனவே, ஆத்திரமடைந்த பழனிவேலு அனிதாவை செல்போனில் கடுமையாக திட்டியுள்ளார்.

இதில் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொள்வது என முடிவெடுத்தார். தனக்கு மிகவும் பிடித்தமான டிக்டாகில் பூச்சி மருந்தை குடிப்பதை பதிவு செய்தார். சிறிது நேரத்தில் கண்கள் சொருகி அவர் மயங்கி விழுவதும் வீடியோவில் பதிவானது.

அதன்பின் அக்கம்பக்கத்தின் அவரை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தனர். டிக் டாக் வீடியோ மோகத்தில் அவரின் இரு குழந்தைகளும் தாயை இழந்துள்ளனர்.