இந்தியா மற்றும் ஆஸ்ட்ரேலியா மோதிய போட்டியில் முக்கியமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது சாதாரண விஷயம் கிடையாது. காரணம் ஆஸ்ட்ரேலிய அணி தொடர்ந்து 10 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இருந்தது. 11வது போட்டியில் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் தான் ஆஸ்ட்ரேலியாவின் தொடர் வெற்றிக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதேபோல உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ந்து கடைசியாக 8 போட்டிகளில் ஆஸ்ட்ரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த சாதனைக்கும் ஆப்பு வைத்துள்ளது இந்திய அணி. இந்த போட்டியில் முதல் விக்கெட்டாக ரோஹித் ஷர்மாவும், 2வது விக்கெட்டாக ஷிக்கர் தவானும் அவுட்டாகினர். தவான் அவுட்டானா பிறகு தோனி அல்லது கே.எல்.ராகுல் களமிறங்குவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், தோனி ஹர்திக் பாண்டியாவை களமிறக்கிவிட்டார். ஹர்திக் பாண்டியா ஆடுகளத்துக்குள் வந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் குழப்பமடைந்தனர்.

ஆனால், ஹர்திக் பாண்டியா ஆடுகளத்துக்குள் வந்த பிறகுதான் அவர் ஏன் 4வதாக களமிறங்கினார் என்று தெரிய வந்தது. முதல் பந்தில் இருந்தே பாண்டியா அடித்து ஆட ஆரம்பித்தார். 27 பந்துகள் பிடித்து 48 ரன்கள் அடித்தார். அதில் 4 முறை பவுண்டரிக்கும், 3 முறை சிக்சருக்கும் பந்தை அனுப்பி வைத்தார். முதல் பந்திலேயே அடித்து ஆடக் கூடிய திறமை ஹர்திக் பாண்டியாவிடம் இருந்த காரணத்தால் தான் தோனி பாண்டியாவை களமிறக்கிவிட்டார். பொதுவாக விராட் கோலி களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தால் தோனி தான் அடுத்து எந்த வீரரை களமிறக்கலாம் என்று முடிவு செய்து அனுப்பி வைப்பார்.

அந்த வகையில் தோனி நடுவில் இந்த மாற்றத்தை கொண்டுவந்தார். இந்த மாற்றம் இந்திய அணிக்கு சூப்பராக கைகொடுத்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியாவின் வெற்றிக்கு பாண்டியாவின் பங்களிப்பும் மிக மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. தோனி மீண்டும் ஒருமுறை அவரது சாதுரியத்தால் மாற்றி காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சரி, தோனியின் இந்த சாதுரிய முடிவை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?