ஓபிஎஸ் எடுக்கும் அதிரடி வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இபிஎஸ் : அதிமுகவில் என்ன நடக்கிறது தெரியுமா நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது அதிமுக ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இடைத் தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளிலும் கூட வெறும் பதில் மட்டுமே அதிமுக வேட்பாளர்கள் வென்றனர். ஆனால் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறுவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. ஓபிஎஸ் தனது மகனையும் இபிஎஸ் ஒரத்தநாடு வைத்திய லிங்கத்தையும் மத்திய அமைச்சராக தீவிரமாக முயன்றனர். ஆனால் ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவி மட்டுமே கொடுக்க முடியும் என்று பாஜக கூறியதால் இருவருக்குமே அந்த பதவி கிடைக்காமல் போய்விட்டது. வெளிப்படையாக பார்க்கும்போது இது முடிந்து போன ஒரு பிரச்சனையாகவே தெரிந்தது.

ஆனால் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை கிடைக்கவிடாமல் இபிஎஸ் தடுத்துவிட்டார் என்று ஓபிஎஸ் தீர்க்கமாக நம்புகிறார். அதேசமயம் மறுபுறம் அதிமுகவில் இருக்கும் சில எம்எல்ஏக்கள் திமுக தரப்பில் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் மறைமுகமாக காய் நகர்த்தி வருகிறார். இதனை முறியடிக்கவே கடந்த திங்கட்கிழமை முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வீட்டிலேயே அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறார்.

திங்கள் அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். ஆனால் அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெறும் ஆலோசனையில் ஓபிஎஸ்சை பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் திடீரென ஜெயலலிதா சமாதிக்கு தனது மகனுடன் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பினார் பன்னீர்செல்வம். அவருடன் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் சென்றது தான் இதில் ஹைலைட்.

நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜெயலலிதா சமாதியில் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தியதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று மாலை திடீரென அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார் ஓ பன்னீர்செல்வம். உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் உடல் நலம் விசாரிக்க ஓபிஎஸ் அங்கு சென்றதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனால் ஓபிஎஸ் உண்மையில் வேறு ஒரு முடிவெடுத்திருப்பதாகவும் எடப்பாடியின் ஆதிக்கத்தை கட்சியில் குறைக்க வியூகம் வகுத்து உள்ளதாகவும் சொல்கிறார்கள். இதுகுறித்து தான் மதுசூதனனை சந்தித்து ஓபிஎஸ் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் கட்சியில் தனது ஆதரவாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாகவே ஓபிஎஸ் சில சலுகைகளை வழங்கி வருவதாகவும் சொல்கிறார்கள். இப்படி ஒரே நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் ஸ்டாலின் தரப்பில் இருந்து வரும் குடைச்சலால் தனக்கு பல் வலி என்று கூறி எடப்பாடி வீட்டிலேயே முடங்கி உள்ளார்.