திமுக வலையில் விழுந்த 4 முக்கிய அமைச்சர்கள் பெரும் குழப்பத்தில் எடப்பாடி சென்னை: திமுக விரித்த வலையில் அதிமுகவின் 4 எம்.எல்.ஏக்கள் விழுந்துவிட்டதாக உளவுத்துறை கொடுத்த தகவலால் முதல்வர் எடப்பாடி தரப்பு அதிர்ந்து போயுள்ளதாம். இதையடுத்து சென்னையில் நேற்று அதிமுக நடத்திய இஃப்தார் விருந்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கமாட்டோம்.. நான் கருணாநிதியின் மகன் என வசனம் பேசி வருகிறார் ஸ்டாலின். ஆனால் கிச்சன் கேபினட் மந்திரி பிரதானிகளோ ஆட்சியை கைப்பற்றியாக வேண்டும் என உறுதியாக இருக்கின்றனர்.

இதற்கு காரணமே புது பலத்துடன் ராஜாங்கம் நடத்தலாம் என அதிகாரப் பசிக்காக துடிக்கும் திமுக எம்.எல்.ஏக்கள் போட்ட தூபம்தான் காரணம். இதையடுத்து இந்த முயற்சிகளுக்கு வேண்டா வெறுப்பாக ஸ்டாலின் சரி என தலையாட்டி இருக்கிறார்.

4 எம்.எல்.ஏக்கள் எங்கே?
இந்த சிக்னலையே உத்தரவாக நினைத்துக் கொண்டு அதிமுக எம்.எல்.ஏ ஒருவரை வளைத்தால் இத்தனை கோடி கமிஷன் என பேரத்தில் குதித்தனர் திமுக நிர்வாகிகள். இப்படியான பேரத்தில் இதுவரை 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் சிக்கிவிட்டனராம்.

எம்.எல்.ஏக்கள் ஆப்சென்ட்
இதை உளவுத்துறை மூலம் உறுதி செய்து கொண்ட பின்னர்தான் அதிமுக எம்.எல்.ஏக்களை சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர். அப்போதும் அந்த 4 எம்.எல்.ஏக்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார் முதல்வர்.

பதில் தராத டெல்லி
இதனால் கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது தூதர் மூலம் டெல்லிக்கு இத்தகவலை பாஸ் செய்திருக்கிறார். இதற்கு முன்னர் எல்லாம் டெல்லியில் இருந்து உடனுக்குடன் பதில் வந்து கொன்டிருந்தது. இப்போது எந்த பதிலும் வரவில்லை என மிக முக்கிய பதவியில் இருக்கும் அந்த தூதர் கையை விரித்திருக்கிறார்.

கடும் நெருக்கடியில் எடப்பாடி
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என திமுக ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத கோபத்தில் ஓபிஎஸ் ஏதேனும் உள்குத்தில் ஈடுபடுவாரோ என்கிற நெருக்கடி. இப்போது 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் அதிமுக பிடியில்.

இஃப்தார் விருந்து புறக்கணிப்பு
இத்தகைய கடும் நெருக்கடியால்தான் அதிருப்தி அடைந்த முதல்வர் எடப்பாடி தரப்பு அதிமுக தலைமைக் கழகம் நடத்திய இஃப்தார் விருந்தில் நேற்று பங்கேற்காமல் புறக்கணித்திருக்கிறாராம். அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு அடுத்து என்ன அஸ்திரத்தை ஏவ வாய்ப்பிருக்கிறது என்பது குறித்தும் கோட்டையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏக்களை வளைத்த திமுக பிரமுகருக்கு ரெய்டுகள் மூலம் நெருக்கடி வர வாய்ப்பிருக்கிறது என கூறப்படுகிறது. இத்தகைய ரெய்டுகள் வரும் என்கிற தகவலாவது டெல்லியில் வந்த காலம் உண்டு. ஆனால் இப்போது டெல்லி காட்டும் கடும் மவுனம்தான் முதல்வர் எடப்பாடிக்கு புரியாத புதிராம்.