மிஸ்டர் லோக்கல் தோல்வி குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
சென்னை: மிஸ்டர் லோக்கல் படத் தோல்வி குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன்.

கார்த்திக் வேணுகோபலன் இயக்கத்தில் ரியோ, ஷெரின், ஆர்ஜே விக்னேஷ், நாஞ்சில் சம்பத், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்கே புரோடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் இம்மாதம் 14ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் மக்களுக்கு பிடித்த வகையில் இருக்கும் எனக் கூறினார்.

2வது படம்:
இதுகுறித்து அவர் பேசியதாவது, “நான் பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது நண்பர்களுக்காக தான். அதன் அடிப்படையில் தான் கனா படத்தை தயாரித்தேன். இரண்டாவது படம் என்ன என யோசிக்கும் போது தான் ரியோ மூலம் பிளாக்‌ஷீப் கதை கேட்டேன். இதையடுத்து தான் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.

அரசியல் நையாண்டி:
இந்த படத்தில் அரசியல் நையாண்டி இருக்கும். அதைத்தாண்டி படத்தில் ஒரு நேர்மை இருக்கும். இந்த படக்குழுவில் உள்ள அனைவரிடமும் அது இருக்கிறது. குறிப்பாக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ஒரு நல்ல மனிதர். நிறைய பேருடைய வாழ்க்கையில் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறார். அந்த மனிதர்களின் ஆசிர்வாதம் அவருக்கு எப்போதும் இருக்கும்.

நஷ்டம் இல்லை:
மிஸ்டர் லோக்கல் படம் நாங்கள் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. அதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும் படம் சரியாக போகவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

ஓடிக் கொண்டே இருப்பேன்:
ஒரு படம் ஓடவில்லை என்பதற்காக நான் விழுந்துவிட மாட்டேன். தோற்றாலும் நான் இங்கு நிற்கிறேன். அது தான் முக்கியம். ஒரு மேட்சில் ஒவுட்டாகிவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடாது. தொடர்ந்து வெறியோடு ஓடிக்கொண்டே இருப்பேன்.

கதைத் தேர்வு:
எனது அடுத்தடுத்தப் படங்கள் மக்களுக்கு பிடிக்கும் வகையில் நிச்சயம் இருக்கும். உண்மையான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா”, என சிவகார்த்திகேயன் கூறினார்.