டெல்லி: மக்களவை தேர்தல்களில் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது பாரதிய ஜனதா. இந்நிலையில் இந்த 17-வது மக்களவை தேர்தல்களில் போட்டியிட்டதில் 78 பெண்கள் வெற்றி பெற்று எம்பிக்களாக பதவியேற்க உள்ளனர்.

இதுவரை இல்லாத அளவிலான எண்ணிக்கையில் பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை கடந்த வியாழனன்று நடைபெற்றது.

பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் கூறியபடி பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் தனித்தே வென்று ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. இந்நிலையில் நடப்பு மக்களவை தேர்தல்களில் நாடு முழுவதும் உள்ள கட்சிகள் சார்பாக சுமார் 700க்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர்

அதிக பெண் எம்பிக்கள் தேர்வு
இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் 54 பெண்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தது. மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த 78 பெண் வேட்பாளர்கள் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்பிக்களாக பதவியேற்க உள்ளனர். இந்த எண்ணிக்கையானது மக்களவை உறுப்பினர்களில் 14.36 சதவீதமாகும். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே தற்போது தான் அதிகளவில் பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

சுயேச்சையாகவும் குவிந்த பெண்கள்
திரிணமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 23 பேரும், பகுஜன்சமாஜ் சார்பில் 24 பெண்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 10 பெண் வேட்பாளர்களும் மக்களவை தேர்தலில் களமிறங்கினர். கட்சிகள் சார்பாக இல்லாமல் சுயேச்சையாகவும் சுமார் 222 பெண்கள் நாடு முழுவதும் போட்டியிட்டனர். உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 104 பெண்கள் போட்டியிட்டனர். பீகாரில் 55 பேரும், மேற்கு வங்கத்தில் 54 பெண்களும் போட்டியிட்டனர்.

முன் இருந்த பெண் எம்.பி-க்கள் எண்ணிக்கை
இதற்கு முன்னர் கடந்த 1952-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல் மக்களவையில் 24 பெண் எம்.பி.க்களே இருந்தனர். 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 52 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் 64 பெண்கள் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்

அதிக பெண் எம்.பி-க்களை தந்த 2 மாநிலங்கள்
தற்போது எம்.பி.யாக உள்ள 41 பெண்களில், 28 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் சோனியா, ஹேமமாலினி உள்ளிட்டோரும் அடங்குவர். நாடு முழுவதும், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அதிகபட்சமாக தலா 11 பெண்கள் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க.வில் இருந்து மட்டுமே 8 பெண்கள் எம்.பி.க்கள் தேர்வாகியுள்ளனர்.

தமிழகம், கேரளாவில் வரவேற்பு எப்படி
தென்னிந்தியாவை பொறுத்த வரை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடும் அளவில் இல்லை கேரளா மாநிலம் ஒரே ஒரு பெண் எம்பியை மட்டுமே தேர்வு செய்துள்ளது கடந்த தேர்தலின் போதும் கேரளாவில் ஒரே ஒரு பெண் எம்பி மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது தமிழகத்தில் 3 பெண் எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

கடந்த தேர்தலை விட கீழிறங்கிய தமிழகம்
தமிழகத்தை பொறுத்த வரை திமுக-விலிருந்து கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய இரு பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் கரூர் தொகுதியில் காங்கிரஸ் பெண் வேட்பாளரான ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் மொத்தம் 64 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். கடந்த மக்களவை தேர்தலின் போது 4 பெண் எம்பிக்களை தேர்வு செய்த தமிழம், தற்போது மூன்று பெண் எம்பிக்களை மட்டுமே தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது