சென்னை: காவிரி – கோதாவரி இணைப்பால் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனை தீரும் தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பாஜக 303 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் 350 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

இதனால் தனிப்பெரும்பான்மையுடன் அந்தக் கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது. இதற்கான பணிகளில் பாஜக தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

எதிர்ப்பு அலை
நாடு முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசிய போதும் தமிழகத்தில் மட்டும் பாஜகவுக்கு எதிர்ப்பு அலையே இருந்தது தேர்தல் முடிவுகளில் தெரியவந்தது. பாஜகவுடன் கூட்டணி வைத்த அனைத்துக்கட்சிகளும் தமிழகத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

அலையை மாற்ற வேண்டும்
இந்நிலையில் எப்படியாவது தமிழகத்தில் பாஜகவை காலூன்ற செய்து விட வேண்டும் என்பதில் அக்கட்சி தீர்க்கமாக உள்ளது. தமிழகத்தில் உள்ள எதிர்ப்பு அலையை ஆதரவு அலையாக மாற்ற வேண்டும் என்பதிலும் பாஜக உறுதியாக உள்ளது.

கோதாவரி- காவிரி இணைப்பு
இதன் காரணமாகவே, தமிழகத்தில் இருந்து ஒரு எம்பி கூட பாஜகவுக்கு கிடைக்காத நிலையில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை கையிலெடுத்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ரூ, 60,000 கோடி செலவில் கோதாவரி ஆற்று நீரை பெண்ணை – காவிரிக்கு கொண்டு வரும் மகத்தான திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.

தண்ணீர் வேண்டுமே
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, மலர் மலர்வதை யாரும் தடுக்க முடியாது, ஆனால் தமிழகத்தில் தாமரை மலர வேண்டுமானால் தண்ணீர் வேண்டும். நீரற்ற குட்டையில் எப்படி தாமரை மலரும் என கூறியிருந்தார்.

தமிழிசை பதில்
கேஎஸ் அழகிரியின் இந்த கருத்துக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் போனதற்கு 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சிதான் என அவர் கூறியுள்ளார்.