டெல்லி: லோக்சபா தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து, தனது தாயிடம் ஆசி வாங்குவதற்காக பிரதமர் மோடி நாளை குஜராத் செல்கிறார்.

லோக்சபா தேர்தலில் பாஜக இமாலய வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இரண்டில் மூன்று பங்கு இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. பாஜக வெற்றியை தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரிடம் பிரதமர் மோடி நேற்று நேரில் சந்தித்து ஆசி பெற்றார். இந்த நிலையில், பிறந்தநாள் மற்றும் பதவி ஏற்பு விழா உள்ளிட்ட முக்கிய தருணங்களில் தனது தாய் ஹிராபென்னிடம் ஆசி வாங்குவதை பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார்.
அதன்படி, தனது தாயிடம் ஆசி வாங்குவதற்காக நாளை மாலை குஜராத் செல்ல இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை வாரணாசி செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாரணாசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளார். மீண்டும் தன்னை தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக செல்கிறார்.

கடந்த வியாழக்கிழமை தேர்தல் முடிவு வெளியானபோது மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட இருப்பது உறுதியானது. இதையடுத்து, குஜராத்தில் உள்ள மோடியின் வீட்டில் ஏராளமான ஆதரவாளர்கள் குவிந்தனர்.

அப்போது பிரதமர் மோடியின் தாயார் வீட்டிற்கு வெளியில் வந்து ஆதரவாளர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். வரும் 30ந் தேதி பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது.