சென்னை: சொந்தமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என நினைக்கும் ஒரு மிடில் கிளாஸ் இளைஞன், அதை எப்படி சாத்தியப்படுத்துகிறான் என்பதை ஜாலியாக சொல்கிறது ஓவியாவ விட்டா யாரு திரைப்படம்.

மதுரை தான் படத்தின் கதைக்களம். எம்பிஏ பட்டதாரியான சஞ்ஜெய்க்கு சொந்தமாக தொழில் செய்து வியாபாராம் செய்ய வேண்டும் என்பது ஆசை. ஆனால் அவரது தந்தை மனோஜ்குமார் அதற்கு தடையாக இருக்கிறார். தாய் மீரா கிருஷ்ணன் மற்றும் தாத்தா டி.பி.கஜேந்திரந்திரனின் செல்லத்தால், தனது கனவை முன்னெடுத்து செல்கிறார்.

இதற்கிடையே ஓவியாவை ஒரு தலையாக காதலிக்கும் பருத்திவீரன் சரவணன், சஞ்ஜெயிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்து, தனது காதலை சேர்த்து வைக்க சொல்கிறார்.

ஆனால் ஓவியாவும், சஞ்ஜெயும் காதலிக்கும் விஷயம் சரவணனுக்கு தெரியாது.

சஞ்ஜெய்யின் தொழில் ஆர்வத்தை வைத்து அவரை நிறைய பேர் ஏமாற்றி பணம் பறிக்கிறார். இதனால் அப்பாவிடம் செமையாக திட்டுவாங்குகிறார். ஒருநாள் பாம்பு பரமசிவத்தின் (ராதாரவி) நட்பு கிடைக்கிறது. அதன் மூலம் மண்ணுலி பாம்பு, சஞ்ஜீவி குச்சி, நாகரத்திரன கல் என நம்ம சதுரங்க வேட்டை தொழிலில் ஈடுபடுகிறார்.

பெரிய பேங்க் மேனேஜர், மாவட்ட கலெக்டர், போலீஸ் அதிகாரி என சகட்டு பேனிக்கு ஆட்டய போடுகிறார்கள் இருவரும். ஒருகட்டத்தில் சஞ்ஜெய்யை தனியாக மாட்டவிட்டுவிட்டு, கம்பி நீட்டுகிறார் பாம்பு பரமசிவம். எல்லோரும் சஞ்ஜெய் மீது பாய, அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பது தான் படம்.

மேலே உள்ள கதை சுருக்கத்தை படித்தாலே புரியும், இது ஒரு லாஜிக் இல்லா ஜாலி படம் என்பது. எதையுமே எதிர்பார்க்காமல் படத்தை பார்த்தால், 2 மணி நேரம் பொழுது போக்கலாம். ராதாரவி, செந்தில், சரவணன், பவர்ஸ்டார் சீனிவாசன், வையாபுரி, அருள்தாஸ், ரவிமரியா, டி.பி.கஜேந்திரன் என நிறைய காமெடி நடிகர்கள் இருப்பதால், படம் ஜாலியாக நகர்கிறது. இத்தனை பேர் இருந்தாலும், ராதாரவி தான் ஸ்கோர் செய்கிறார். பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, அவரே அதை கலாய்க்கும் இடம், ராதாரவியின் அக்மார்க் நக்கல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் ஓவியா நடித்த படம் இது. அதனால் இமேஜ் பார்க்காமல் புதுமுக ஹீரோவுடன் சகஜமாக நடித்திருக்கிறார். ஓவியாவின் பெயரை வைத்து தான் படத்திற்கு பப்ளிசிட்டி செய்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் அவருக்கு, வழக்கமான கிளாமர் ஹீரோயின் ரோல் தான். நன்றாக கிளாமர் காட்டி, சிறப்பாக நடித்திருக்கிறார்.

அறிமுக நாயகன் சஞ்ஜெய் தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். ஓவியாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் அருமையாக செய்திருக்கிறார். ராதாரவிக்கு பிறகு படத்தின் மற்றொரு கலகல கேரக்டர் ரவி மரியா. கொஞ்ச நேரமே வந்தாலும், செமையாக ஸ்கோர் செய்கிறார்.

ஸ்ரீகாந்த்தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம்போட வைக்கிறது. நாகராஜின் ஒளிப்பதிவில், ஓவியா உள்பட அனைவருமே அழகாக தெரிகிறார்கள். குறைந்த பட்ஜெட் கமர்சியல் படத்துக்கு தேவையானதை சரியாக செய்து கொடுத்திருக்கிறார். படம் போரடிக்காமல் நகர்வதற்கு, சாய்சுரேஷின் எடிட்டிங் கைக்கொடுக்கிறது.

படத்தின் விளம்பரத்துக்கு ஓவியாவ விட்டா வேற யாரு கிடைப்பா. தலைப்பில் மட்டுமே ஓவியாவுக்கு முக்கியத்துவம். அவரது கேரக்டரை இன்னும் கொஞ்சம் சிறப்பாக வடிவமைத்திருக்கலாம். பாவம் இயக்குனர். “கரப்பான் பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்கும்” என அவர் நினைத்து பார்த்திருக்க மாட்டார். எப்படியோ, பிக் பாஸ்க்கு முன்னரே ஓவியாவை ஹீரோயினாக போட்டதால், படத்தின் பப்ளிசிட்டிக்கு நன்றாகவே கைக்கொடுத்திருக்கிறது.

கதை, லாஜிக், புத்திசாலித்தனம் என எதையும் எதிர்பார்க்காமல் தியேட்டருக்கு சென்றால், கொஞ்ச நேரம் சிரித்துவிட்டு வரலாம். இதெல்லாம் காமெடியா என திட்டினால், அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது.

சரி வாங்க தியேட்டருக்கு போவோம். நமக்கும் ‘ஓவியாவ விட்டா யாரு’ இருக்கா….!