பெங்களூரு: கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தாமதமாக முடிவு செய்ததும், காங்கிரஸ் கட்சி தோல்வியடைய காரணமாக இருந்திருக்கலாம் என அம்மாநில அமைச்சர் தேஷ்பாண்டே கூறியுள்ளது கட்சியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பாரதிய ஜனதா மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் கடந்த முறை போலவே இம்முறையும் எதிர்கட்சி அந்தஸ்து காங்கிரஸ் கட்சிக்கு எட்டா கனியாகி விடும் போல சூழல் உள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஆளும் மதஜ – காங்கிரஸ் கூட்டணி மக்களவை தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், 25 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள இந்த படுதோல்வி குறித்து அம்மாநில அமைச்சர்களில் ஒருவரான தேஷ்பாண்டே கருத்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 50 ஆண்டுகளாக நான் காங்கிரஸ் கட்சியில் உள்ளேன்.

இந்நிலையில் தற்போது கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை கண்டு வருந்துவதாக கூறினார். மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி தலைமை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். வேட்பாளர்கள் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் காலதாமதத்தால் கூட தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்திருக்கலாம் என்றார்.

மேலும் வடக்கு கர்நாடக மாவட்டங்களில் மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு மக்கள் செல்வாக்கு சொல்லும்படி இல்லை. எனவே அவர்களுக்கு அத்தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டாம் என கூறப்பட்டது.

லோக்சபா தேர்தலில் படுதோல்வி… உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் ராஜினாமா

ஆனால் அதையும் மீறி அக்கட்சி வேட்பாளர்களுக்கு வட கர்நாடக தொகுதிகள் ஒதுக்கப்பட்டன என குறிப்பிட்டார். மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளது வருத்தம் அளிக்கிறது

மக்களவை தேர்தல் முடிவுகளால் கர்நாடக மாநில கூட்டணி ஆட்சியில் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து தேசிய அளவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார். மேலும் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த தேஷ்பாண்டே,வேலைவாய்ப்பின்மை, நீர் பிரச்சனை விவசாய பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.