திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிக மரியாதை கொடுப்பதற்கு நிறைய காரணம் இருக்கிறது
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அதிக மரியாதை கொடுப்பதற்கு நிறைய காரணம் இருக்கிறது. இப்போது ஸ்டாலினை கேசிஆர் சுற்றி சுற்றி வருவதற்கு பின் முக்கிய காரணம் உள்ளது..

லோக்சபா தேர்தலுக்கு பின் மூன்றாவது அணி உருவாக்கி அதன் மூலம் புதிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் (கேசிஆர்) முயன்று கொண்டு இருக்கிறார். இதற்காக அவர் எல்லா மாநில கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.

அதன் ஒரு கட்டமாக திமுக தலைவர் ஸ்டாலினை அவர் கடந்த திங்கள் கிழமை சந்தித்தார். பல முக்கியமான விஷயங்களை இவர்கள் இருவரும் இந்த சந்திப்பில் பேசினார்கள்.

சந்திப்பும் இழுபறியும்
கேசிஆரும் ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டதே பெரிய இழுபறிக்கு பின்புதான் நடந்தது. முதலில் இவர்கள் சந்திப்பு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் முக்கிய பேச்சுவார்த்தை, சமாதானத்திற்கு பின் இரண்டு கட்சி தலைவர்களும் சென்னையில் சந்தித்துக் கொண்டார்கள்.

இல்லை
இந்த சந்திப்பிற்கு பின் பேசிய ஸ்டாலின், நாங்கள் மூன்றாவது அணி அமைப்பது குறித்து பேசவில்லை. இப்போதும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் எங்கள் ஆதரவு. மூன்றாவது அணி குறித்த பேச்சுக்கே இடம் இல்லை. தேர்தல் முடிவிற்கு பின் மற்ற விஷயங்களை பேசிக்கொள்ளலாம் என்று ஸ்டாலின் பேசி இருந்தார். இது கேசிஆருக்கு கொஞ்சம் அதிர்ச்சி அளித்தது.

ஆனால் என்ன
ஆனால் கேசிஆர் தொடர்ந்து ஸ்டாலின் மீது கூட்டணிக்காக நம்பிக்கை வைத்து இருக்கிறார். ஸ்டாலின் எப்படியாவது மூன்றாவது அணியில் இணைவார் என்று கேசிஆர் நம்புகிறார். காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது அணியில் இணையும் என்பதால் கேசிஆர் ஸ்டாலின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார். ஸ்டாலினை கேசிஆர் இப்படி சுற்றி சுற்றி வர முக்கிய காரணம் இருக்கிறது. அது ஒரு சென்டிமெண்ட் காரணம்.

என்ன சென்டிமெண்ட்
1996ல் இந்திய பிரதமர் யார் என்ற பெரிய குழப்பம் நிலவி வந்தது. பல பெயர்கள் முன்மொழியப்பட்ட போது, அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி மஜதவின் அப்போதைய தலைவர் தேவ கவுடாவின் பெயரை முன்மொழிந்தார். அதேபோல் தேவ கவுடா பிரதமர் ஆனார். இதுதான் தற்போது ஸ்டாலின் பின் கேசிஆர் சுற்றுவதற்கும் காரணம்.

தேசிய அரசியல்
தெலுங்கானாவில் கேசிஆரின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மிகவும் வலுவான கட்சி. இதனால் மாநில அரசியலை கேடிஆர் ராவின் (கேசிஆர் மகன்) கையில் கொடுத்துவிட்டு, மூன்றாவது அணியின் பிரதமராக ஆசைப்படுகிறார் கேசிஆர். அதனால் ஸ்டாலினின் ஆதரவு தேவை என்று கேசிஆர் ஆசைப்படுகிறார். ஸ்டாலின் தன் பெயரை முன்மொழிவார் என்று கேசிஆர் நம்புகிறார். ஆனால் இந்த ஒரு சென்ட்டிமென்ட் மட்டும் காரணம் கிடையாது.

இன்னொரு காரணம்
2004ல் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுகவிற்கு நிறைய பிரச்சனைகள் வந்த போது அதை பேசி தீர்த்தவர் கேசிஆர். இதற்காக தனது கட்சிக்கு வழங்கப்பட்ட சில அமைச்சர்கள் பொறுப்பை அவர் திமுகவிற்கு விட்டுக் கொடுத்தார். அதற்கு கைமாறாக ஸ்டாலின் இப்போது உதவி செய்வார் என்று கேசிஆர் எதிர்பார்க்கிறார்.

இப்போது இடங்கள்
அதேபோல் தமிழகத்தில் தன் கட்சி சார்பாக கேசிஆர் முக்கிய அரசியல் கருத்து கணிப்பு ஒன்றையும் நடத்தி உள்ளார். அதன்படி திமுக தான் போட்டியிடும் 20 தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கேசிஆருக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் ஸ்டாலின் பிரதமரை தேர்வு செய்வதில் மிக முக்கியமான சக்தியாக உருவெடுப்பார் என்று கேசிஆர் நம்புகிறார்.

ஆனால் என்ன
ஆனால் ஸ்டாலின் இன்னும் கேசிஆருக்கு எந்த விதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை. ஸ்டாலின் ஏற்கனவே ராகுல் காந்திக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் எண்ணத்தில் உள்ளார். திமுக – காங்கிரஸ் உறவு என்பது கூட்டணி என்பதை தாண்டி, நெருக்கமாகிவிட்டது. இதை உடைக்க திமுக விரும்பவில்லை என்கிறார்கள்.