எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

மே 19-ம் தேதி நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையொட்டி, அரக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என பேசினார். மேலும் நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். அந்தக் கொலைக்குப் பின்னணி கேட்க வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

இந்துக்கள் குறித்து அவதூறு கருத்து கூறிய கமலுக்கு அரசியல் தலைவர் மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். கமல் பேச்சு குறித்து காவல் நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்நிலையில் எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பிரதமர், உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்தவொரு நபரையும் காயப்படுத்துவதையோ, கொலை செய்வதையோ அனுமதிக்காது. அதனால் எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனுக்குப் பதிலடி தரும் வகையில் பிரதமர் மோடி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.