சென்னை: கார்த்தி பட இயக்குநர்கள் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்க ஒப்பந்தமாகி வருவது திரையுலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகைப் பொறுத்தவரை ராசி என்ற நம்பிக்கை அதிகம். ஒரு படம் தோல்வி அடைந்து விட்டாலே சமயங்களில் ராசியில்லாத நடிகர், நடிகை, இயக்குநர் என முத்திரை குத்தப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். அந்தளவிற்கு சினிமாவில் ராசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் கார்த்தியை வைத்து படம் இயக்குபவர்கள் அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்று வருகின்றனர். இது கார்த்தியின் ராசி என்ற பேச்சு தற்போது உலா வருகிறது.
இதோ அது பற்றி விலாவாரியாக பார்ப்போம்…

சிறுத்தை:
சிவா:
கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கினார் சிவா. இதனால் அவரது பெயரே சிறுத்தை சிவா என ஆனது. ஆனால், அடுத்து அஜித்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அடுத்தடுத்து அஜித்தை வைத்து நான்கு படங்களை அவர் கொடுத்தார்.

மெட்ராஸ்:
பா.ரஞ்சித்:

இதேபோல், கார்த்தியை ஹீரோவாக்கி தனது இரண்டாவது படமான மெட்ராஸை இயக்கினார் பா.ரஞ்சித். அடுத்தபடத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினியை வைத்து கபாலி என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர், அடுத்ததாக காலா படத்தையும் தந்தார்.

தீரன்:
ஹெச்.வினோத்:

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தியை இயக்கினார் ஹெச்.வினோத். அதற்கு அடுத்த படமே அஜித்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. பிங்க் பட ரீமேக்கான அப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அவர் அஜித்தை வைத்தே மற்றொரு படம் தர இருக்கிறார் என்பது ஊரறிந்த தகவல்.

விஜய்:
லோகேஷ் கனகராஜ்:

இந்நிலையில் விஜய்யின் 64வது படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.