டெஹ்ரான்: தங்கள் நாட்டின் முழு ராணுவமும் தயார் நிலையில் இருக்கிறது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் இப்படி தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஈரானை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் தனது படைகளை குவித்து வருகிறது. சவுதிக்கு அமெரிக்கா நேற்று தனது படைகளை அனுப்பியது.

அதை தொடர்ந்து இன்னும் 1,20,000 துருப்புகளை அனுப்ப போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா எண்ணெய் ஏற்றுமதி உட்பட மூன்று பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் காரணமாகவே தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பிரிட்டனுக்கான ஈரான் தூதர் ஹமீத் பெய்டென்ஜாத் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், எங்களை அமெரிக்கா தேவையில்லாமல் சோதித்து பார்க்கிறது. நாங்கள் சவுதி மீது எந்த விதமான தாக்குதலையும் நடத்தவில்லை
ஆனாலும் அமெரிக்கா எங்கள் மீது பழி போடுகிறது. எங்களுக்கு எதிராக படைகளை வேறு குவித்து வருகிறது, இதை நாங்கள் இனியும் பொறுத்துக்கொள்ள மட்டோம். எங்கள் படையும் தயாராக உள்ளது.

எங்களுக்கு போர் மீது விருப்பமில்லை. ஆனால் அமெரிக்கா எங்களை தாக்க நினைத்தால் நாங்கள் அவர்கள் நினைக்காத அளவிற்கு மிக மோசமான தாக்குதல் நடத்துவோம் என்று, குறிப்பிட்டுள்ளார்.