சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், கோட்சே குறித்து கூறிய கருத்து குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சினிமாவில் படு பிசியாக உள்ளார் ரஜினிகாந்த். அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார், புக் ஆகியும் வருகிறார். கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அவரது அரசியலுக்கு வருவதற்கான அறிகுறியே காணோம்.

இந்த நிலையில் தர்பார் படத்தின் ஷூட்டிங்குக்காக மும்பை போயிருந்த ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் வழக்கம் போல செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கேள்வி கேட்க முற்பட்டனர்.

அதில் படப்பிடிப்பு நல்லபடியா இருந்துச்சா என்ற கேள்விக்கு மட்டும் நல்லா இருந்துச்சு என்று பதிலளித்தார் ரஜினிகாந்த். வேறு கேள்விகளுக்கு வழக்கம் போல ரஜினி பதில் தரவில்லை. குறிப்பாக இந்தியாவின் முதல் இந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் கூறியிருப்பது குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு சிரித்தபடியே கருத்து கூற விரும்பவில்லை என்று கூறி நகர்ந்தார் ரஜினி. செய்தியாளர்கள் விடாமல் கேள்வி கேட்டபோதும் அவர் சிரித்தபடியே காருக்குப் போய் விட்டார். அதன் பின்னர் அனைவரிடமும் சிரித்தபடியே “குட்நைட்” என்று கூறி காரில் ஏறி கிளம்பிப் போய் விட்டார் ரஜினிகாந்த்.

முக்கியப் பிரச்சினைகள், முக்கிய சர்ச்சைகள் குறித்து ரஜினிகாந்த் பொதுவாக கருத்து கூறுவதில்லை (அப்படியே கூறினாலும் அவை சர்ச்சையாகி விடுகிறது) என்பது குறிப்பிடத்தக்கது.