சென்னை: மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்கு கமல்ஹாசனுடன் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசிவருவதாக போலி செய்தி ஒன்று வைரலாக சுற்றி வருகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியுடன் ரகசியமாக பேசி வருவதாக தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் யாரோதான் இதுபோல செய்தியை பரப்பி இருக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் முணுமுணுப்பு எழுந்துள்ளது.

பிரபல ஊடகம் லோகோவுடன், சமூக வலைத்தளத்தில் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. அதில் தேர்தலுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்காக கமல்ஹாசனுடன் தமிழிசை சௌந்தரராஜன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக போலி தகவல் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலி தகவல்கள் பகிரப்படுவது அதிகரித்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஊடகங்கள் இந்த தகவல் பொய் என்று மறுப்பு வெளியிடும் நிலைமைக்கு வந்துள்ளன.